ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், சுல்தானிய நிலச் சட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூலாவ் குகூப் சேர்க்கப்பட்டுள்ளப் போதிலும், ஜொகூர் தேசியப் பூங்கா எனும் அதன் தற்போதைய நிலை, தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என உறுதியளித்தார்.
இன்று, தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், சுல்தான் இப்ராஹிம், ஜொகூர் மாநிலத் தேசியப் பூங்கா குகூப் பகுதிகளைப் பாதுகாக்கும் என்று கூறினார்.
“ஜொகூர் மாநில அரசாங்கம், அரசின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக சுல்தானின் தூய்மையான நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டது, குகூப் தீவு இயற்கையின் ஒரு பொக்கிஷமாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்து, ஜொகூர் மக்கள் மட்டுமின்றி, அனைத்து மலேசியர்களின் நலனுக்காக மாநிலத்தின் அப்பகுதி பாதுகாக்கப்படும்.
“ஒருசில தரப்பினர், குகூப் தீவு எதிர்காலத்தில் மேம்பாடு செய்யப்படும் என்ற எதிர்மறைக் கருத்துகளைப் பரப்பி, இவ்விவகாரத்தை அரசியலாக்கியது வறுத்தமளிக்கிறது.
“அரசியலமைப்பை ஆதரித்து கடைப்பிடிக்கும் அனைத்துத் தரப்பினரும், மத்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநில அரசின் அதிகாரங்களையும் ஜொகூர் மாநில அரசின் அரசியலமைப்பு அதிகாரங்களையும் மதிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.