சாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம் மகாதிரைச் சந்தித்தனர், ஹரப்பான் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடும்

 

கட்சியிலிருந்து இன்று விலகிய சாபா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் பிரதமர் மகாதிரைச் சந்தித்துள்ளனர். இதை மகாதிர் உறுதிப்படுத்தினார்.

“ஆம், அவர்கள் என்னைச் சந்தித்தனர். அவர்கள் அம்னோவிலிருந்து விலக விரும்புவதை என்னிடம் சொல்ல வந்தனர்”, என்று பிரதமர் மகாதிர் இன்றிரவு கூறினார்.

ஆளும் கூட்டணியை ஆதரித்தால், அவர்களைப் பக்கத்தான் வரவேற்கும். அவர்கள் கறைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் ஆதரவு அளிப்பவர்களாகவும் கடந்த காலத்தில் தவறேதும் செய்யாதவர்களாகவும் இருந்தால், நாம் அவர்களை ஏற்றுக்கொள்வோம்”, என்றாரவர்.

ஆனால், அவர்கள் தற்போதைக்கு சுயேட்சைகளாகத் தொடர வேண்டும் என்பதோடு அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மகாதிர் மீண்டும் கூறினார்.

அம்னோவிலிருந்து பலர் வெளியேறும் திட்டத்தை மகாதிரும் செம்பொரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிசாமுடின் ஹுசேனும் கூட்டாக தீட்டிய சதித்திட்டம் என்று கூறப்படுவது பற்றிய கேள்வியை மகாதிர் தட்டிக்கழித்தார்.

அவர்கள் வெளியேற விரும்பினால், அது அவர்கள் எண்ணத்தைப் பொறுத்தது. வர விரும்பாவிட்டால் அவர்கள் அம்னோவில் இருக்கலாம் என்று மகாதிர் கூறினார்.