பக்கத்தில் உள்ள படத்தில் நாம் பார்க்கிறோமே பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அம்னோ தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு அது அக்டோபர் 22-இல் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின்.
அச்சந்திப்பைக் காண்பிக்கும் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அது தொடர்பாக தம் முகநூல் பக்கத்தில் கருத்துரைத்த காடிர், அம்னோ தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அச்சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினார்.
அச்சந்திப்பில் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், முன்னாள் பெர்லிஸ் மந்திரி புசார் ஷஹிடான் காசிம், முன்னாள் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் நோ ஒமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
“ஒரு காலத்தில் தம்மைப் பழித்துரைத்தவர்கள் என்ற போதிலும் பிரதமர் அவர்களுக்கு விருந்து வைத்தார். பழைய காலம் என்றால் உணவில் விஷம் வைத்திருப்பார்கள்.
“அவர்களில் சிலர் மகாதிரைச் சந்திப்பது தங்களுக்குப் ‘பாதுகாப்பு’ என்று நினைத்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் நினைத்திருந்தால் அது தப்பு”, என்று குறிப்பிட்ட காடிர், நவம்பர் 15-இல் தெங்கு அட்னான்மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
“குற்றம் குற்றமே”, என்றாரவர்.
தெங்கு அட்னான் ஒரு தொழில் அதிபரிடமிருந்து ரிம2 மில்லியன் பெற்றுக்கொண்டதாக நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் குற்றம் சாட்டப்பட்டார்.
ஷாஹிடான் காசிம், வயது குறைந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என நவம்பர் 12-இல் குற்றம் சாட்டப்பட்டது.
முன்னதாக, கைரி ஜமாலுடின் அவர்களின் சந்திப்பைக் காட்டும் படங்களை டிவிட்டரில் “இரகசியச் சந்திப்பு” என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார்.
சாபா அம்னோ பிரதிநிதிகள் நிறைய பேர் கட்சியிலிருந்து வெளியேறியதோடு தீபகற்ப மலேசியாவிலும் நிறைய பேர் வெளியேறத் திட்டமிடுவதாகக் கூறியதை அடுத்து இப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கின.