அம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம் அம்னோவைக் கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதற்காக

முகம்மட் ஹசான் தாமும் மேலும் நான்கு அம்னோ தலைவர்களும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்தது கட்சித்தாவுவதற்காக அல்ல என்று விளக்கினார்.

எந்தக் கட்சிக்கு இரு தசாப்தங்களுக்குமேல் தலைமை வகித்தாரோ அந்தக் கட்சியைக் கலைத்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவே தாங்கள் ஐவரும் மகாதிரைச் சென்று கண்டதாக அம்னோ துணைத் தலைவர் கூறினார்.

“மரியாதைக்காக அவரைச் சென்று கண்டோம்”, என்றவர் இன்று பிற்பகல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“துன் எம். (மகாதிர்) அம்னோ கலைக்கப்படும் என்று சொல்லி இருந்தார். அப்படிச் செய்து விடாதீர்கள் என்று அவரைக் கேட்டுக் கொண்டோம்”, என்று கூறிய ஹசான் அது ஒரு சுமூகமான சந்திப்பு என்றார்.

“துன் எங்களை வரவேற்றார். நான் அவரிடம் பணியாற்றியவன். சாத்தே கொடுத்தார், மற்ற உணவு வகைகளும் கொடுத்து உபசரித்தார்.

“தயை கூர்ந்து அம்னோவைக் கலைத்து விடாதீர்கள் என்று கேட்டு கொண்டோம். அப்படி எதுவும் நடவாது என்று உறுதி அளித்தார்”. இதுதான் அச்சந்திப்பின்போது நடந்தது என்று ஹசான் விளக்கினார்.

அச்சந்திப்பில் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், முன்னாள் பெர்லிஸ் மந்திரி புசார் ஷஹிடான் காசிம், முன்னாள் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் நோ ஒமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

அவர்கள் ஐவரும் மகாதிரைச் சந்திக்கும் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

சாபா அம்னோ பிரதிநிதிகள் நிறைய பேர் கட்சியிலிருந்து வெளியேறியதை அடுத்து இப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கின.

அதைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவிலும் நிறைய பேர் வெளியேறத் திட்டமிடுவதாகக் கூறும் செய்திகளும் வந்தன.

இன்று பிற்பகல் புத்ரி அம்னோ முன்னாள் தலைவரும் மஸ்ஜித் தானா எம்பியுமான மாஸ் எமியாத்தி சம்சுடின் பெர்சத்துவில் சேர்ந்து விட்டதாக அறிவித்தார்.