ஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும், சாபா அம்னோ இளைஞர் தலைவர் கோரிக்கை

 

ஒரு டஜனுக்கு மேற்பட்ட சாபா அம்னோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த மிக அண்மையச் சம்பவத்திற்கு ஸாகிட்டின் தலைமைத்துவ போக்குதான் காரணம் என்று சாபா அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கஸாலி அன்சிங் கூறுகிறார்.

ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் துணைப் பிரதமர் ஸாகிட் தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அம்னோவை கேடயமாகப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார்.

அம்னோ தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடையாது என்று கஸாலி ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் ஸாகிட் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவ்வாறு செய்ய அவர் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய கஸாலி, அவர் விலக மறுத்தால், அதை உச்சமன்றம் விரைவாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் கட்சி முன்னேறிச் செல்ல முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

போராட்டத்தை உதறித்தள்ளிவிட்டு அம்னோவிலிருந்து வெளியேறியிருப்பவர்களையும் அவர் சாடினார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, முன்னாள் முதலமைச்சர் சாலே கெருவாக் மற்றும் பண்டிகார் அமின் மூலியா போன்ற மூத்த தலைவர்கள் வெளியேறியது மட்டுமல்லாது அவர்கள் பிரதமர் மகாதிருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இந்த முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் இப்போதைக்கு சுயேட்சைகளாக இருப்பார்கள். பின்னர் அவர்கள் மகாதிரின் தலைமையிலான பெர்சத்துவில் சேர்ந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.