அம்னோ தொடர்ந்திருக்க பிரதமராகக் காத்திருக்கும் அன்வாரை நாடுகிறார் நஸ்ரி

அம்னோ ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படையாகச் சுருங்கியுள்ளது. அதற்குச் சாதகமான எதையும் டாக்டர் மகாதிரிடமிருந்து அது பெற முடியவில்லை.

இதற்கு காரணம் அம்னோ உயர்நிலை தலைவர்களுடன் ஒத்துழைப்பு பற்றி ஆலோசிப்பதற்கு முன்பு அம்னோ கலைக்கப்பட வேண்டும் என்கிறார் மகாதிர். கட்சியின் பதிவு இரத்து செய்யப்படலாம் என்ற கவலையில் அம்னோ உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இச்சூழ்நிலையில், அம்னோவின் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் பிரதமராகக் காத்திருக்கும் அன்வார் இப்ராகிம்மை நாடிச் சென்றார்.

அன்வாருடன் பேசியதாகக் கூறப்படுவதின் முழு விபரங்களை நஸ்ரி நேற்றிரவு சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்களுடன் நடத்திய ஒரு கூட்டத்தில் விவரித்தார்.

மலேசியாகினி நஸ்ரி ஆற்றிய உரையின் பதிவைப் பெற்றுள்ளது.

தொடர்பு கொண்ட போது, பிஎன் தலைமைச் செயலாளருமான நஸ்ரி அப்பதிவின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தினார்.

“இது ஒன்றும் புதிதல்ல. பெரும்பாலானவர்கள் (அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்) அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த இரகசியம்தான்… இதில் தவறானது ஏதுமில்லை”, என்று நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.

நஸ்ரியின் நான்கு வேண்டுகோள்கள்

கடந்த நாடாளுமன்ற அமர்வின் இரண்டாவது வாரத்தில் தாம் அன்வாரைச் சந்தித்ததாக நஸ்ரி சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்களுடனான அவரது சந்திப்பில் தெரிவித்தார்.

அன்வாரிடம் நான்கு விசயங்களைக் கேட்டதாகவும் அன்வார் அவற்றை ஏற்றுக்கொண்டதாகவும் நஸ்ரி தெரிவித்தார். அதில் அம்னோ கலைக்கப்படக்கூடாது என்பது முதல் வேண்டுகோள்.

“அன்வார் என்னிடம் கூறினார், ‘நஸ்ரி, நான் அம்னோவைக் கலைக்க மாட்டேன். நாம் அரசியலில் பெருந்தனையுடன் இருக்க வேண்டும். எதிர்ப்பாளர் பதிவு இரத்து செய்யப்பட்டுவிட்டால், நாம் எப்படி போராட முடியும்? நாம் நற்பண்புகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும்”, என்று அவர் கூறிக்கொண்டார்.

இரண்டாவது வேண்டுகோள்: அன்வார் அதிகாரத்திற்கு வந்ததும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு தொல்லைகள் கொடுக்கக்கூடாது.

“நான் அவரிடம் (அன்வாரிடம்) கூறினேன். அவர் (நஜிப்) எந்தத் தவறு செய்திருந்தாலும், குற்றம் சுமத்துங்கள். ஆனால் அவருக்குத் தொந்தரவு கொடுக்காதீர்…அவர் மீது எத்தனைமுறை பிணை விதிப்பது.

“அன்வார் கூறினார், ‘நான் இதை (நீதிமன்ற குற்றச்சாட்டுகளும் சிறைவாசமும்) 20 ஆண்டுக்களுக்கு அனுபவித்துள்ளேன்.

“எனது எதிரிகளும் அவ்வாறு பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை, மேலும்  அவர்கள் எனது நண்பர்கள். நஜிப் எனது துணைத் தலைவர் (நான் அம்னோ இளைஞர் தலைவராக இருந்த போது), மற்றும் (அஹமட்) ஸாகிட் (ஹமிடி) ஒரு காலத்தில் எனது கையாள்”, நஸ்ரி கூறிக்கொண்டார்.

நஸ்ரியின் மூன்றாவது வேண்டுகோள்: “கெத்துவா கம்போங்” முறையை அன்வார் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

நஸ்ரியின் நான்காவது வேண்டுகோள்: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க எம்பிகள் பெறும் அதே ஒதுக்கீட்டைப் பெற வேண்டும். அப்போது அம்னோ “மக்களுக்கு கொடுக்க” முடியும்.

கைமாறாக, அம்னோ எம்பிகள் அன்வாரை ஆதரிப்பார்கள்

இந்த நான்கு வேண்டுகோளுக்கு கைமாறாக, அம்னோ எம்பிகள் அன்வார் இன்னும் “ஒன்றரை ஆண்டுகளில்” பிரதமரானதும் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள்.

எனினும், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின்-நண்பர்களாக மட்டுமே, அரசாங்க நிருவாகத்தின் ஓர் அங்கமாக அல்ல, இருப்பார்கள் என்பதை நஸ்ரி வலியுறுத்தினார்.

“நாங்கள் அமைச்சரவையில் இருக்க விரும்பவில்லை. நாங்கள் அதைச் செய்தால் அது எங்களுக்கு அடுத்தத் தேர்தலில் சிரமமாக இருக்கும்.

“நாங்கள் பெர்சத்து (அமனா மற்றும் வாரிசான்) இருக்கைகளில் போட்டியிட விரும்புகிறோம். எங்களுடைய இருக்கைகள் எங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும், ஆகவே நாங்கள் அவர்களுடன் போராட வேண்டும். அதனால் நாங்கள் அவர்களோடு அமைச்சர்களாக இருக்க முடியாது.

“மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய அரசாங்கக் கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு கூட்டணியாக மட்டுமே நாங்கள் இருப்போம்” என்று நஸ்ரி கூறினார்.

பிகேஆர், டிஎபி, காபுங்கான் பார்டி சரவாக் ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தில் 110 இருக்கைகள் இருக்கின்றன என்று அன்வார் தெரிவித்ததாக நஸ்ரி கூறிக்கொண்டார்.

“அவர் அப்படி கூறினார், ‘எனக்கு இன்னும் இரண்டு தேவைப்படுகிறது. நான் உம்மை (நஸ்ரியை) சேர்த்துக் கொண்டால், நீர் இன்னும் ஒருவரை கொண்டு வருவீர், அது 112 ஆகும். ஆக நான் பிரதம மந்திரி ஆகிவிடுவேன்”, என்று நஸ்ரி கூறினார்.

நஸ்ரியின் கூற்றுப்படி, அரசாங்கம் அமைப்பதற்கு தமக்கு அமனா, பெர்சத்து, அல்லது வாரிசான் தேவையில்லை என்று அன்வார் சாடையாகக் குறிப்பிட்டார்.

அன்வார் பிரதமர் பதவியை மகாதிரிடமிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுக்கொள்வதற்கான பக்கத்தான் ஹரப்பான் ஒப்பந்தப்படி நடந்துகொள்வார் என்று அன்வார் தம்மிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் நஸ்ரி வலியுறுத்திக் கூறினார்.

மலேசியாகினி அன்வாரின் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு நஸ்ரி கூறிக்கொண்டதற்கு அவரின் பதிலுக்காக காத்திருக்கிறது.

தாம் அம்னோ உறுப்பினர்களுடன் பேசியது அவர்களுக்கு தற்போதைய நிகழ்ச்சிகள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி தெரியப்படுத்துவதற்காகும் என்று நஸ்ரி மலேசியாகினிக்கு விளக்கம் அளித்தார்.

எதிர்காலப் பிரதமர் என்ற முறையில் தாம் அன்வாரை அனுகியது இயல்பானதே என்று கூறிய நஸ்ரி, மகாதிர் விதித்த நிபந்தனைகள் “மிகக் கடினமானவை” என்றாரவர்.

“ஆக, நாம் இப்போது செய்யப் போவது, காத்திருக்க வேண்டியதுதான் (அன்வார் பிரதமர் ஆவதற்கு)”, என்று நஸ்ரி மேலும் கூறினார்.