இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னாள் பெல்டா தலைவர் இசா சமட்மீது நம்பிக்கை மோசடி(சிபிடி) செய்ததாக ஒரு குற்றசாட்டும் ரிம3 மில்லியனுக்குமேல் கையூட்டு பெற்றதன் தொடர்பில் ஒன்பது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
குற்றச்சாட்டுகள் அனைத்தும் கூச்சிங்கில் பெல்டா தங்குவிடுதி வாங்கிய விவகாரத்துடன் தொடர்புடையவை.
நெகிரி செம்பிலானின் நீண்டகால முன்னாள் மந்திரி புசாரான இசா, கூச்சிங்கில் மெர்டேகா ஹோட்டல் அண்ட் சுவிட்ஸ் என்னும் தங்குவிடுதி ரிம160 மில்லியனுக்கு வாங்கப்பட்ட விவகாரத்தில் நம்பிக்கை மோசடிக் குற்றம் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. பெல்டா இயக்குனர் வாரிய ஒப்புதலின்றி அந்தத் தங்குவிடுதி வாங்கப்பட்டிருக்கிறது.
பெல்டா முதலீட்டுக் கழக இயக்குனர் என்ற முறையில் இசா அக்குற்றத்தைச் செய்தாராம்.
எஞ்சிய 9 குற்றச்சாட்டுகளும் இசா, ககாசான் அபாடி சொத்து நிறுவன இயக்குனர் வாரிய உறுப்பினர் இக்வான் ஸைடலிடமிருந்து ரிம3 மில்லியன் கையூட்டு பெற்றதுடன் தொடர்புடையவை.
இசா குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி ரிம800,000 பிணையுடனும் ஒரு நபர் உத்தரவாதத்தின்பேரிலும் அவரை விடுவித்தார். அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.