அம்னோவில் தேர்தல் ‘உடனடியாக’ நடத்தப்பட வேண்டும்- கைரி

அம்னோவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையில் வெளியேறுவதால் கட்சிக்குப் புதிய தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்க “உடனடி”த் தேர்தல் நடத்தப்படுவது அவசியம் என்கிறார் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்.

இணையத்தள பதிவு ஒன்று கேட்டுக்கொண்டிருப்பதைப் போல் புதிய கட்சித் தேர்தலை நடத்துவதற்காக அவசரப் பொதுக் கூட்டம் கூட்டப்படுவதைத் தானும் வரவேற்பதாக ரெம்பாவ் எம்பி-ஆன கைரி டிவிட் செய்திருந்தார்.

முதலில் வந்திருந்த இணையத்தளப் பதிவு, கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி பதவி விலக வேண்டும் என அம்னோ உச்சமன்றமும் இளைஞர், மகளிர் பகுதிகளும் சேர்ந்து கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.

“அதை நானும் ஏற்கிறேன். தேவை உடனடிக் கட்சித் தேர்தல்”, என்று கைரி பதிலுக்கு டிவிட் செய்திருந்தார்.