அம்னோவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை பெருகி வரும் வேளையில் அக்கட்சி நிலைத்திருக்க சிறந்த தீர்வு காணப்பட வேண்டும் என்று அதன் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“நிலைமை மோசமாக உள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்கத்தக்க ஒரு தீர்வு காணப்பட வேண்டும்”, என்று நஜிப் இன்று பெக்கானில் கூறினார்.
கடந்த சில நாள்களாக அம்னோவிலிருந்து எம்பிகளும் மற்ற தலைவர்களும் வெளியேறிய வண்ணமாக உள்ளனர். சாபாவில் அக்கட்சியின் ஆறு எம்பிகளில் ஐவரும், 10 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேரும் இரண்டு செனட்டர்களும் பெரும்பாலான தொகுதித் தலைவர்களும் வெளியேறி விட்டனர். நேற்று தீவகற்ப மலேசியாவில் ஆறு எம்பிகள் கட்சியிலிருந்து விலகினர்.
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி-யைப் பதவி விலகச் சொல்லும் கோரிக்கைகளும் கட்சியில் வலுத்து வருகின்றன.
நாடு முழுக்க கிட்டத்தட்ட மூன்று மில்லியன் உறுப்பினர்களையும் 22,000 கிளைகளையும் கொண்டுள்ள அம்னோ இன்னமும் வலுவுடன்தான் உள்ளது என்று பெக்கான் எம்பி- ஆன நஜிப் கூறினார்.
கட்சி நீடித்திருக்க வேண்டும், அதை உறுதிப்படுத்துவதுதான் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்றாரவர்.