பாஸ்: அம்னோ கட்சியினருக்கு எங்கள் கதவுகளும் திறந்தே உள்ளன

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், அம்னோ கட்சியின் எம்பிகளோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, சாதாரண உறுப்பினர்களோ அவர்கள் தாராளமாக பாஸ் கட்சியில் சேரலாம் என்றார்.

“எங்கள் கதவு திறந்தே உள்ளது. எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் , அல்லது சாதாரண உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்கிறோம்.

“ஆனால், ஊழலில் சிக்கியவர்களைப் பாதுகாக்க மாட்டோம்”, என்றவர் இன்று கூபாங் கிரியானின் கூறினார்.

வியாழக்கிழமை தொடங்கி 10 எம்பிகள் அம்னோவிலிருந்து வெளியேறியதை அடுத்து துவான் இப்ராகிம் இவ்வாறு கூறினார்.

பெர்சத்து தலைவர் முகைதின் யாசினும் எதிரணி உறுப்பினர்கள் பெர்சத்துவுக்கு வருவதை அக்கட்சி வரவேற்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் ஊழலில் அல்லது அதிகார மீறல்களில் ஈடுப்பட்டவர்களாக இருந்தால் நிராகரிக்கப்படுவார்கள் என்றார்.

“மூன்று மில்லியன் உறுப்பினர்களையும் பில்லியன் கணக்கில் சொத்துகளையும் கொண்ட அம்னோவுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது”, என்று துவான் இப்ராகிம் கூறினார்.

14வது பொதுத் தேர்தலில் தோற்றாலும் 54 எம்பிகளைக் கொண்டிருந்த அம்னோதான் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்தது.

ஆனால், இப்போது 38 எம்பிகள்தான் அதில் உள்ளனர். இதனால் பிகேஆரையும் டிஏபியையும் அடுத்து மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது.