புதிய மலேசியா உருவாகியுள்ள தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்திலும் அரசு சார்பான மற்ற அமைப்புகளிலும் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இடம்பெறுவதற்காக இந்தியர் சார்பான அரசியல் கட்சிக்கு அவசரத் தேவை எழுந்துள்ளதென்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்தியச் சமுதாயத்தின் அரசியல், பொருளாதார, கல்வி, பண்பாட்டு, சமயக் கூறுகளை பாதுகாப்பதுடன் அவற்றை மேம்படுத்துவது, இந்தியர்களின் அபிலாஷைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மலேசிய முன்னேற்றக் கட்சிக்கான(மேப்) பதிவு நிலுவையில் உள்ளதென்று இதன் இடைக்கால நிர்வாகக் குழுத் தலைவருமான பொன். வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மலேசிய முன்னேற்றக் கட்சியில் இணைய ஆர்வம் தெரிவித்து வரும் அனைத்துத் தரப்பினருடன் தேசிய அளவில் பேச்சு நடந்து வருகிறது. குறிப்பாக கட்சி(‘மேப்’)க் கிளைகளை அமைப்பது தொடர்பாக இந்தியர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கை வருகின்ற நிலையில், மலேசிய முன்னேற்றக் கட்சியின் இடைக்கால நிர்வாகக் குழு சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
மலேசியக் கூட்டரசின் அரசியல் சாசன வரையறைக்கு உட்பட்டு, இந்தியச் சமுதாயம் வலிமை பெறவும் வளர்ச்சி காணவும் தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அரசியல் கட்சி சார்பில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கூட்டம் நடத்த இருப்பதாகவும் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சமூக மேம்பாட்டுடன் தனி மனித வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டு மலர்ந்துள்ள இக்கட்சியால், மலேசிய இந்தியச் சமுதாயத்தில் புதிய நம்பிக்கை தோன்றியுள்ளது; அதற்கேற்ப, மலேசியவாழ் இந்தியர்களை அனைத்து மட்டத்திலும் உறுதியாக பிரதிநிதிப்பதுடன் எந்தத் தரப்பினரும் பின்தங்கி விடாதபடி இந்தக் கட்சி செயல்படும். குறிப்பாக, மலேசியா காணும் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான பங்கு இருப்பதை மலேசிய முன்னேற்றக் கட்சி உறுதி செய்யும். குறிப்பாக, நம்பிக்கைக் கூட்டணி அரசு கண்டு வரும் புத்தாக்க நடவடிக்கையில் மலேசிய முன்னேற்றக் கட்சியும் தன் பங்கை ஆற்றும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- நக்கீரன்
இந்தியர் நலனைப் பிரதிநிதித்துப் பேச நந்நம்பிக்கை கூட்டணியில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்கட்சியாக இருக்கும் பொழுது நந்நம்பிக்கை கூட்டணியின் இந்திய தலைவர்கள் காட்டிய தீவீரம் இன்று இல்லை. அவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கியிருப்பது கண்கூடு. இன்ன பிரச்சனை என்று எடுத்துக் கொண்டு போனால், ‘அது என்னுடைய அமைச்சின் கீழ் இல்லை. அந்த இந்திய அமைச்சரைச் சென்று பார்’ என்பதும். இந்தியர்களுக்குப் பிரச்சனை என்றால் எனக்கென்ன வந்தது என்பதுபோல் நடந்து கொண்டால் தத்தம் அமைச்சர் பதவி ஐந்து வருடங்களுக்கு மேல் தாங்காது என்பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.