இவ்வாரம் அம்னோவிலிருந்து பலர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். டிஎபி அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யாது என்று டிஎபியின் துணைத் தலைவர் கோபிந்த் சிங் உறுதியாகக் கூறுகிறார்.
டிஎபி அம்னோவுடன் இணைந்து செயல்படாது. இது இறுதி முடிவாகும். அவர்கள் எங்களுக்கு எதிராக 14-ஆவது பொதுத் தேர்தல் வரையில் போராடியுள்ளனர்.
அம்னோவை நிராகரிக்கும்படி நாங்கள் மக்களைக் கேட்டுக் கொண்டோம். அவர்களும் புதிய மலேசியாவை நிர்மாணிக்கும் நம்பிக்கையில் அம்னோவை நிராகரித்தனர். ஆகவே, நாம் இப்போது அவர்களுடன் வேலை செய்யக்கூடாது என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
பிஎன்னின் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் பக்கத்தான் ஹரப்பானில் இணைவது கவனமாக ஆராயப்பட வேண்டும், ஏனென்றால் மக்கள் அளித்துள்ள அதிகாரம் மதிக்கப்பட வேண்டும் என்றாரவர்.
ஹரப்பான் மக்களின் நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஹரப்பான் மலேசியாவைத் தூய்மைப்படுத்தி பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றனர் என்று கோபிந்த் மேலும் கூறினார்.