ஹரப்பான் அரசாங்கத்திற்கு ஐசெர்ட் தேவையில்லை, சுல்கெப்லி கூறுகிறார்

 

பக்கத்தான் அரசாங்கத்திற்கு ஐநாவின் அனைத்துலக அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை அகற்றும் (ஐசெர்ட்) ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டிய தேவை இல்லை என்று டாக்டர் சுல்கெப்லி அஹமட் இன்று கூறினார்.

ஹரப்பான் நிருவாகம் கடந்த காலத்தில் சிறுபான்மை இனம் மற்றும் சமயத்தினரைக் கொடுமைப்படுத்திய அரசாங்கங்கள் போன்றதல்ல என்று அமனாவின் வியூக இயக்குனரும் சுகாதார அமைச்சருமான சுல்கெப்லி இன்று ஈப்போவில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கூறினார்.

மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைவருக்கும் நீதி, நேர்மை, சமத்துவம் மற்றும் சமய சுதந்திரம் போன்ற பொதுக்கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவோம். அதே வேளை, அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சியையும் ஆதரிப்போம் என்றாரவர்.

“நமக்கு ஐசெர்ட் தேவையில்லை, இதர அரசாங்கங்களுக்கு அது தேவைப்படலாம் ஏனென்றால் அவை மற்ற இனங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிடம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை”, என்று அவரது உரையை முடித்து வைக்கும் போது கூறினார்.