முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு மனு செய்துள்ளார்

 

மலாக்கா முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு தமது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இன்று ஆயர் கெரோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஹிம் தம்பி சிக் அவரது மனுவை மலாக்கா பெர்சத்து தலைவர் முகமட் ரெட்ஸுவான் யுசோப்பிடம் கொடுத்தார்.

மலாக்காவின் ஆறாவது முதலமைச்சராக 12 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர் மீது 1994 ஆம் ஆண்டில் சட்டரீதியான கற்பழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அக்குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.

அன்றைய கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினரான, தற்போதைய நிதி அமைச்சர், லிம் குவான் எங், ரஹிமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக அன்றைய அரசாங்கத்தை குறைகூறினார்.

பின்னர், தேசநிந்தனைச் சட்டம் 1948 மற்றும் அச்சகம் மற்றும் வெளியீடு சட்டம் 1984 சட்டம் ஆகியவற்றின் கீழ் லிம் குவான் எங் சிறையிலடைக்கப்பட்டார்.

பெர்னாமா செய்திப்படி, ரஹிமும் இன்னும் 100 முன்னாள் அம்னோ உறுப்பினர்களும் அவர்களது மனுவைத் தாக்கல் செய்தனர்.

நான் அம்னோவிலிருந்து வெளியேறுகிறேன் ஏனென்றால் இப்போது பெர்சத்து மலாய்க்காரர்களைச் சிறப்பாக தற்காக்க முடியும் என்றார் ரஹிம்.