ஜாஹிட்: தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே போனால் அம்னோ அழிந்து விடும்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கட்சிக்குள் பிளவுகள் தொடர்வது அதன் அழிவுக்குத்தான் வழிகோலும் என்று எச்சரித்தார்.

கட்சித் தலைவர்கள் எது வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும், தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்வது பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றவர் வலியுறுத்தினார்.

“தோல்விக் காலத்தில், கட்சி வீழ்ச்சி கண்டுள்ள நேரத்தில் பலர் கட்சிக்கு எது நல்லது என்பதைப் பற்றிச் சிந்திப்பதில்லை, விசாரணைகளிலிருந்தும் வழக்குகளிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.

“ இது நாம் உறுதியற்றவர்கள் என்பதைக் காண்பிக்கிறது. ஏனென்றால் நம்மைப் பாதுகாப்பது பற்றித்தான் நினைக்கிறோமே தவிர, கட்சியைப் பற்றி நினைப்பதில்லை”, என்று ஜாஹிட் தெமர்லோவில் குறிப்பிட்டதாக அம்னோ ஆன்லைன் கூறுகிறது.

அம்னோ அதன் படைக்கருவிகளைக் கொண்டு எதிரிகளைத்தான் தாக்க வேண்டுமே தவிர கட்சிக்குள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று ஜாஹிட் கேட்டுக் கொண்டார்.

அம்னோவிலிருந்து எம்பிகளும் சட்டமன்ற உருப்பினர்களும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிர்ருக்கும் வேளையில் ஜாஹிட் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

கட்சியிலிருந்து வெளியேறிய பலரும் ஜாஹிட் கட்சியைச் சரியான திசையில் கொண்டு செல்லத் தவறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

14வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய நாடாளுமன்றத்தில் 54 எம்பிகளுடன் மிகப் பெரிய கட்சியாக இருந்த அம்னோவில் இப்போது 38 எம்பிகள்தான் மீதமுள்ளனர்.