அம்னோவில் நல்லவர்களும் உண்டு என்கிறார் மகாதிர்
டேவிட் தாஸ்: 70விழுக்காட்டு மலாய்க்காரர்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்கவில்லை. அவர்கள் அம்னோ அல்லது பாஸை ஆதரித்தார்கள். அதற்காக அவர்களைக் கெட்டவர்கள் எனலாமா?
பலருக்கு அவர்கள் காலங்காலமாக இருந்து வந்துள்ள ஒரு கட்சியைக் கைவிட்டு வர மனமில்லை. பாஸ் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் விடாக் கண்டர்கள். அந்த நிலையிலும் பாஸை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
தேர்தலுக்குப் பின்னர் அவர்களில் பலர் அம்னோ தலைவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு மனம் மாறியிருக்கலாம்.
தலைவர்கள் நடந்தவற்றை எண்ணி வருந்தி திருந்துவார்களா? அப்படித் தெரியவில்லை. ஆனால், தொண்டர்களைத் தலைவர்கள்போல் நினைத்து விடக்கூடாது.
தலைவர்களின் பின்னணியை எம்ஏசிசி நன்கு ஆராய வேண்டும். அவர்கள் ஹரப்பானின் சீர்திருத்தத் திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பல்லின அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
கண்காணிக்கிறேன்: ஹரப்பான் புதிய பிஎன்னா வடிவெடுக்கிறதா? வெட்கக் கேடு. …..தலைவர்கள் கட்சித் தாவுவார்களாம், இதுவரையிலான பிரச்னைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் காண்பித்துக் கொள்வார்களாம்.
மன்னிக்க வேண்டும், மகாதிர் அவர்களே. எனக்கு இதில் சற்றும் உடன்பாடு இல்லை. அவர்களை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அவர்கள் சுயேச்சைகளாக செயல்படட்டும். அடுத்த தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெறட்டும். பிறகு எந்தக் கட்சியில் சேர விரும்புகிறார்களோ சேரட்டும். விரும்பியவுடன் வந்து விட முடியாது, சார்!
பெட்20231: மகாதிரின் முடிவு விவேகமான முடிவுதான் என்பேன். இது நாட்டின் பெரும்பான்மை மக்களான மலாய்க்காரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம்.
அம்னோ எம்பிகளை அப்படியே விட்டு விட்டால் பாஸ் கட்சி அவர்களைக் கவர்ந்திழுக்க முயலும்.
எம்பிகளை இந்தப் பக்கம் கொண்டு வந்தால் அவர்களின் தொண்டர்களான மலாய்க்காரர்களையும் சேர்த்து இழுத்துக் கொள்ள முடியும். இப்போது ஹரப்பானில் மலாய்க்கார ஆதரவாளர் எண்ணிக்கை குறைவுதான். அந்த வகையில் மகாதிர் கட்சியையும் வலுப்படுத்தியுள்ளார், பாஸ் கட்சியை எதிர்ப்பதற்குப் படைபலத்தையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார்.
பல்லினவாதி: இக்காலத்திலும் இனத்தைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதிலிருந்து மீண்டு முன்செல்ல வேண்டும். அது மலேசியர்களுக்கும் மலேசியாவுக்கும் நல்லதாக இருக்க வேண்டும்.
அம்னோ அரசியல்வாதிகள் கொள்கையற்றவர்கள். முன்னாள் பிரதமர் நஜிப் ஆட்சியில் இருந்தவரை அவரை விட்டுக்கொடுக்காமல் ஆதரித்து வந்தார்கள். அம்னோ 14வது பொதுத் தேர்தலில் தோற்ற பிறகே அவருக்கு எதிராக பேசத் தொடங்கினார்கள். அதைக் கூட மறந்து விடலாம். ஆனால், அவர்கள் ஊழலில் சிக்காதவர்களாக இருத்தல் வேண்டும்.
ஆக மகாதிர் அவர்களே, கவனிக்க வேண்டியது வருகின்ற தலைவர்களின் தரத்தை, அவர்களின் எண்ணிக்கையை அல்ல. இப்போதைய பிரச்னைகள் பலவற்றுக்கு நீங்களும்தான் காரணம். அதைச் சரிசெய்ய உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது. வீணாக்கி விடாதீர்கள்.
மலேசியன்: அம்னோவில் நல்லவர்களும் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர்கள் இப்போதைக்கு ஹரப்பான் அரசாங்கத்துக்கு வெளியிலேயே இருக்கட்டும்.
அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், ஜிஇ 15க்குப் பிறகு வரலாம்.
கங்கோங்: நல்லவர்களா? நஜிப்பின் கீழ் நிகழ்ந்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டபோது தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்தார்களே இவர்களா நல்லவர்கள்?
நஜிப் அவரது ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோரை அடக்கி ஒடுக்கி வைத்த போதெல்லாம் வாய்மூடி மெளனமாக இருந்தார்களே, இவர்களா “நல்லவர்கள்”?
இப்போது அம்னோவிலிருந்து வெளிவந்துள்ள நிலையில்கூட, ஊழல் அரசாங்கத்தை ஆதரித்ததற்கு வருத்தப்படுவதாக ஒரு வார்த்தையாவது கூறி இருப்பார்களா?
ஸ்லம்டோக்: அம்னோ முன்னாள் தலைவர்கள் பலர் 1எம்டிபியை நஜிப் கொள்ளையிட்டது பற்றிப் பேசினால் நஜிப்பைத் தற்காக்க பாய்ந்து கொண்டு வருவார்கள்.
இன்னும்கூட அம்னோவில் தவறிழைத்த பலர், விசாரணை செய்யப்படாமல் சுதந்திரமாக திரிகிறார்கள். இவர்களையும் மகாதிர் பெர்சத்துவில் சேர்த்துக் கொள்வாரா?
சுயேச்சைகளாக செயல்படுவோரிடமும் மகாதிர் கவனமாக இருக்க வேண்டும். மகாதிரை அல்லது அன்வாரை ஆதரிப்பதாகக் கூறும் அம்னோவிலிருந்து கட்சித்தாவி வந்த இந்தச் சுயேச்சைகள், தங்களின் ஆதரவு தேவை என்றால் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசும் நாள் வரக்கூடும்.
ஈப்போபிபி: மகாதிருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அம்னோவின் அசிங்கத்தைக் கண்ட நீங்கள் கொள்ளைக்காரர்களுடன் உறவு வேண்டாம் என்று முடிவு செய்து அம்னோவிலிருந்து வெளியேறினீர்கள். பாராட்டப்பட வேண்டிய செயல். அதற்காக உங்களை ஆதரித்தோம்.
ஆனால், அந்த அசிங்கத்தைக் கண்டும் இந்தத் தவளைகள் அதிலேயே ஊறிக் கிடந்தனர். அம்னோ வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டனர், வெற்றியும் பெற்றனர். வெற்றி பெற்றதும் இப்போது கட்சிக்குத் துரோகம் இழைக்கிறார்கள், வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை “நல்லவர்கள்” என்கிறீர்கள் நீங்கள். அவர்கள் அத்தனை பேரும் சந்தர்ப்பவாதிகள். வாய்ப்புக் கிடைத்தால் உங்களையும் ஹரப்பானையும் முதுகில் குத்தத் தயங்க மாட்டார்கள்.
அப்ட் கரிம்: மக்கள் ஹரப்பானுக்குத்தான் வாக்களித்தார்கள். அம்னோவுக்கோ பாஸுக்கோ அல்ல. இந்த அம்னோ ஆள்கள் ஊழல் அரசாங்கத்துக்குத் துணை நின்றவர்கள். உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் போராட வேண்டும் என்ற நெறியை மறந்தவர்கள்.
இன்று அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டால் அது தப்பாகி விடும்.
நல்லதுக்குப் பாராட்டு. கெட்டதுக்குத் தண்டனை. அதுதான் சரி.