முன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும் விசயத்தில் கவனம் தேவை: பெர்சத்துவுக்கு காடிர் அறிவுறுத்து

மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் அம்னோவின் முன்னாள் தலைவர்களைச் சேர்த்துக் கொள்வதில் அவசரம் கூடாது என்று பெர்சத்துவை எச்சரித்துள்ளார்.

அம்னோவில் செல்லாக்காசாகிவிட்ட அவர்களில் சிலரை பெர்சத்துவில் இணைத்துக் கொண்டது பெரிய வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது என்றவர் கூறினார்.

“அவர்கள் ஒரு நேரத்தில் நம் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களின் கட்சி சிதைந்து போய்க் கிடக்கிறது. அதனால்தான் நம்முடன் வந்து சேர்கிறார்கள். அவர்களின் கட்சியைச் சிதைத்தவர்கள், அவர்களை அன்றி வேறு யார்? , என்றவர் இன்று அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.

மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரகிம் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு மனுச் செய்திருப்பதாகக் கூறப்படும் வேளையில் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரகிமின் விண்ணப்பத்தைப் பல தரப்பினரும் குறைகூறியுள்ளனர்.

பெர்சத்து வெளியாருக்கு வலைவீசாமல், கட்சிக்காகப் போராடிய அதன் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என காடிர் கேட்டுக்கொண்டார்.

“நாம் (தேர்தலில்) வெற்றிபெற்ற பிறகு வந்து கதவைத் தட்டுவோரைப் பிறகு பார்ப்போம் முதலில் நம்மவர்களைக் கவனிப்போம்”, என்றாரவர்.