காலஞ்சென்ற தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க சுமார் ஆயிரம் பேர் கூடினர்

காலஞ்சென்ற தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் உடல் இன்று காலை மணி 10.30 வாக்கில் கோலா கெடா, ஸ்கோலா கெபாங்சான் தெபாங்காவுக்கு ஒரு ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, பள்ளிக்கு உள்ளும் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க காத்திருந்தனர்.

பள்ளியிலிருந்து அடிப்பின் உடல் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சவவூர்தியில் அவரின் பெற்றோரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கூடவே, தீயணைப்பு, மீட்புத் துறை பணியாளர்கள் 200 பேர் சீருடையில் ஊர்வலமாக சென்றனர்.

அடிப் நல்லுடல் அவரது வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள மஸ்ஜித் அஸ்-ஸாஆடா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்படும்.

கடந்த மாதம் சுபாங் ஜெயா ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் கடுமையாகக் காயமுற்ற அடிப், தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு 9.41க்கு அவரது உயிர் பிரிந்தது.