நெகிரி எம்பி மாநில பிகேஆர் தலைவராவதற்குத் தொகுதிகள் எதிர்ப்பு

நெகிரி செம்பிலானில் பெரும்பாலான பிகேஆர் தொகுதித் தலைவர்கள் மந்திரி புசார் அமினுடின் ஹருன் மாநில பிகேஆர் தலைவராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

மலேசியாகினியின் பார்வைக்குக் கிடைத்த கடிதத்தில் மந்திரி புசார் “நிர்வாகத்தில் பலவீனமானவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“எட்டுத் தொகுதிகளில் ஏழு தொகுதிகள் அமினுடின் பிகேஆர் மாநிலத் தலைவராவதை எதிர்க்கின்றன”, என்று அக் கடிதம் கூறிற்று.

ரோஸ்லி ஒமார் (கோலா பிலா), கரிப் முகம்மட் சாலே(ஜெம்புல்), அஹ்மட் அஸாம் ஹம்சா(சிரம்பான்), இஸ்மாயில் அஹமட் (ராசா), யுஸ் மஸ்மி முகம்மட் யூசுப்(ஜெலுபு) ஆகிய தொகுதித் தலைவர்கள் கடித்ததில் கையெழுத்திட்டிருந்தனர்.

தம்பின் தொகுதித் தலைவரான மந்திரி புசார், ரபிசி ரம்லியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, அன்வாருடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து இவ்விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

“அக்கூட்டத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மட் ரபி அப் மாலிக்கை மாநிலத் தலைவராக நியமிக்கப் பரிந்துரைத்தோம்”, என அவ்வட்டாரம் கூறியது.

ஆனாலும், மாநிலத் தலைவர்களை நியமிப்பது கட்சித் தலைவரின் தனியுரிமையாகும் என்பதையும் அவ்வட்டாரம் குறிப்பிட்டது.

அமினுடின் உடலளவிலும் திடமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் 29-இல் அவர் இருதய சிகிச்சை செய்து கொண்டார். நவம்பர் 8-இல் அளவுக்கு அதிகமான சளி இருந்ததால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அமினுடினின் நியமனத்தை எதிர்த்த மாநிலத் தலைவர்கள் ரபிசி செனட்டராக நியமிக்கப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவருக்குப் பதில் கரிப் செனட்டராக்கப்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர்.