அடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ தேவை- ஜாஹிட்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்தையும் அதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளையும் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இறந்து போன அவருக்கு நீதி கிடைக்க அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றாரவர்.

“அடிப் மரணத்தையும் ஆலயத்தில் நிகழ்ந்த அசம்பாவிதங்களையும் முழுமையாக விசாரிக்க ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும். அது ஒரு சாதாரண குற்றச்செயல் அல்ல. ஒரு சிலர் சமயத்தைப் பயன்படுத்தி உண்மையைத் திரித்துக் கூறியுள்ளனர். அடிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்”, என்றவர் டிவிட் செய்திருந்தார்.

நவம்பர் 27-இல், சுபாங் ஜெயா ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் அருகில் கலகக்காரர்களால் எரியூட்டப்பட்ட வாகனங்களில் தீயை அணைப்பதற்காக அனுப்பப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்களில் அடிப்பும் ஒருவர்.

கலகத்தில் சிக்கிக்கொண்ட அடிப் அவர் அமர்ந்திருந்த வாகனத்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார் என்று போலீசார் கூறினார். அவருடைய விலா எலும்புகள் பல முறிந்தன. உள்ளுறுப்புகளுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

போலீசார் அடிப்பைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நால்வரைக் கைது செய்தனர். இப்போது அவர்கள் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர். ஆனால், நேற்றிரவு அடிப் உயிரிழந்ததை அடுத்து அவ்விவகாரத்தை ஒரு கொலை என போலீசார் திருத்தி வகைபடுத்தியுள்ளனர்.