ரபிசி: கேஜே-யையும் நுருல் இஸ்ஸாவையும் சந்தித்தது புதிய கட்சி அமைப்பதற்காக அல்ல

அண்மையில் தானும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரும் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின்னும் ஒரு புதிய கட்சியை அமைப்பதற்குச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுவதை ரபிசி ரம்லி மறுத்தார்.

சமூக வலைத்தளங்களில் தாங்கள் மூவரும் அடிக்கடி கருத்துப் பரிமாறிக் கொள்வதை வைத்து ஒரு புதிய கட்சியை, அதுவும் இளைஞர்களுகான கட்சியை அமைக்கத் திட்டம் போடுவதாக ஆருடம் கூறப்படுவதைக் காண வேடிக்கையாக உள்ளதென ரபிசி டிவிட் செய்திருந்தார்.

“நான், நுருல் இஸ்ஸா, கைரி ஜமாலுடின் மூவரும் பகலுணவுக்காக ஒன்று கூடியதைச் செய்தியாக வெளியிட்டிருந்த பெரித்தா ஹரியானுக்கு நன்றி.

“கட்சித் தாவுவது பற்றியோ புதிய கட்சி அமைப்பது பற்றியோ நாங்கள் விவாதிக்கவில்லை.

“கேஜே இன்ஸ்டாகிராம் பற்றிக் கூறினார், இஸ்ஸா பள்ளிப்பிள்ளைகளுக்குத் தேவையான செய்திகளைச் சொன்னார். நான் உடலைப் பருக்க வைக்கும் வழிமுறை பற்றி எடுத்துரைத்தேன்…அவ்வளவுதான்”, என்றவர் கிண்டலடித்திருந்தார்.

ரபிசி, நுருல் இஸ்ஸா, ரெம்பாவ் எம்பியும் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவருமான கைரி ஆகிய மூவருக்குமிடையிலான சந்திப்பு நேற்று கோலாலும்பூர், பங்சாரில் ஒரு உணவகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.