பி.வேதமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் பிரிவு கோரிக்கை விடுத்திருப்பதன் தொடர்பில் அதன் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானைச் சாடினார் பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி.
அமைச்சர்களை நியமித்தவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அவர் செய்த முடிவையே சைட் சாதிக் எதிர்க்கிறாரா என்று டிஏபி தலைவர் வினவினார்.
“வேதமூர்த்தி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளைச் சேராதவராக இருக்கலாம். ஆனாலும், இந்திய சமூகத்துக்கு அவர் ஆற்றியுள்ள பணிகளுக்காக அவர் ஓர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரை அமைச்சராக நியமித்தவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர்தான்.
“அவரால் நியமிக்கப்பட்ட வேதமூர்த்தியைப் பதவி விலகக் கோருவது மகாதிரை இழிவுபடுத்துவது ஆகாதா. மேலும், கட்சித் தலைவர் செய்த முடிவுக்கு எதிராகவே குரல் எழுப்புகிறது பெர்சத்து இளைஞர் பிரிவு”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, பெர்சத்து இளைஞர்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்று, பிரதமர்துறையில் ஒற்றுமைக்கும் சமூக நற்பண்புக்கும் பொறுப்பான அமைச்சரான வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை மகாதிரிடம் கொடுத்தது.
அக்குழுவில் சைட் சாதிக்கும் இருந்தார். இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சரான சைட் சாதிக் அக்குழுவில் இடம்பெற்றது முறையாகுமா என்றும் இராமசாமி வினவினார்.