லத்தீபா பகிரங்கமாக அன்வாரைக் குறைகூறியிருக்கக் கூடாது- பிகேஆர் அடிநிலை உறுப்பினர்கள்

வழக்குரைஞர் லத்தீபா கோயாவுக்கு எதிராக இன்று புகார் பதிவு செய்த பிகேஆர் அடிநிலை உறுப்பினர்கள், அவர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைப் பகிரங்கமாகக் குறைகூறி இருக்கக் கூடாது என்றனர்.

“கருத்துகளைத் துணிச்சலாக சொல்லும் உரிமை அவருக்கு உண்டு. பிகேஆரில் யார் வேண்டுமானாலும் தலைமையைக் குறை சொல்லலாம். ஆனால் அதை முறையான வழிகளில் சொல்ல வேண்டும்.

“அவரும் முறையான வழிகளில் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாம். பொதுவில் சொல்லியிருக்கக் கூடாது. ஊடகங்கள் அதைத் திரித்துச் சொல்லிவிடக் கூடும்”, என கிள்ளான் பிகேஆர் தகவல் தலைவர் முகம்மட் பராஸி முகம்மட் ஷா கூறினார்.

லத்தீபாமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கிள்ளான் மற்றும் இந்திரா மக்கோடா பிகேஆர் தொகுதிகள் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் புகார் பதிவு செய்தனர்.

அன்வார், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேண்டியவர்களாகவும் பார்த்து மாநிலத் தலைவர்களாக நியமிக்கிறார் என்று லத்தீபா குறை கூறியதன் தொடர்பில் அவருக்கு எதிராக புகார் செய்யப்பட்டது.

அவர் கட்டொழுங்கைமீறி கட்சியின் பெயரைக் கெடுத்து விட்டதாக அவர்கள் கூறினர்.

திங்கள்கிழமை லத்தீபா அவ்வாறு கூறியதை அடுத்து சில மணி நேரங்களில் அன்வாரின் மகள் நுருல் இஸ்ஸா பினாங்கு மாநிலத் தலைவர் பதவியைத் துறந்தார்.

ஜோகூர் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பாசிர் கூடாங் எம்பி ஹசான் கரிமும், தமக்கு அப்பதவி வேண்டாம் என்று மறுதலித்தார்.