அம்னோவிருந்து வெளியேறியவர்களிடம் மனமாற்றம்- பங் மொக்தார்

சாபா அம்னோவிலிருந்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்களிடம்   இப்போது மனம் மாற்றம்   ஏற்பட்டிருக்கிறதாம். சாபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடின் கூறுகிறார்.

அம்னோவிலிருந்து வெளியேறிய பலர், மீண்டும் அம்னோவுக்குத் திரும்பிவர விரும்புகிறார்கள் என கினாபாத்தாங்கான் எம்பி கூறினார்.

பெர்சத்து கட்சி சாபாவுக்கு விரிவுபடுத்தப்படுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டதாம்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தம் கட்சி சாபாவுக்குச் செல்லாது என்று கூறியிருப்பதுதான் இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் என்றாரவர்.

யாரெல்லாம் திரும்பி வர விரும்புகிறார்கள் என்பதை அவர் கூறவில்லை..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சித் தாவுவது அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்குக் குழப்பத்தைதான் உண்டுபண்ணும் என பங் மொக்தார் கூறினார்.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடையே உயர் நெறிகளையும் நேர்மையையும் நிலைநிறுத்த கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவருவது அவசியம் என்றாரவர்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளுக்கும் தொகுதி மக்களுக்கும் நாட்டுக்கும் பொறுப்பானர்களாக இருத்தல் வேண்டும்.

“பக்கத்தான் ஹரப்பான் அரசு அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” , என்றவர் கேட்டுக்கொண்டார்.