டாய்ம் : ஒவ்வொரு நாளும் ஹராப்பான் அமைச்சர்கள் கடனைப் பற்றியே பேசினால், மக்கள் சோர்வடைவார்கள்

நாட்டின் கடன்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறிதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென டாய்ம் சைனுட்டின் கூறியுள்ளார்.

இன்று, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அந்த முன்னாள் நிதியமைச்சர், அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மட்டும் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தால், யாராக இருந்தாலும் சோர்வடைந்து போவார்கள் என்றார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களை நிராகரித்துவிடுவார்கள் என்றும் அவர் ஹராப்பான் தலைவர்களுக்கு நினைவுறுத்தினார்.

“மக்கள் கடன்களைப் பற்றி கேட்க விரும்பவில்லை, அது பழைய கதை. அரசாங்கம் அதனை சரிசெய்ய வேண்டும், அதற்கு பெயர்தான் நிர்வாகம்.

“அரசாங்கம் கடன் இருப்பதாகக் கூறினால், அது அரசாங்கத்தின் பொறுப்பு, அவர்கள்தான் தீர்க்க வேண்டும். மக்களுக்கு விலைவாசி குறைய வேண்டும், வருமானம் பெருக வேண்டும், அதுமட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். இதுவும் அரசாங்கத்தின் பொறுப்பு,” என்று உலு சிலாங்கூரில் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறினார்.

ஹராப்பான் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றக் கூடியவையே, ஆனால் அதில் அரசாங்கத்தின் முழு கவனம் இருக்க வேண்டும், அதற்கு சற்று கால அவகாசமும் தேவை என்றார் அவர்.

“அமைச்சர்கள் பிரச்சனைகளைக் கலைய வேண்டும். எல்லாருக்கும் பிரச்சனைகள் தெரியும், ஆனால் அதனையே தினமும் பேசினால் சலித்து போய்விடும்,” என அவர் கூறினார்.