அன்வார்: குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு, வாழ்க்கை செலவினங்கள் மீது கவனம் செலுத்துங்கள்

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், அறிக்கைகள் வழி ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்து வரும் வேளையில், அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம், சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

“தலைவர்கள் சூழலை சரி செய்ய வேண்டும், எதிர்மறை அறிக்கைகள் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

“கட்சிக்குள்ளோ அல்லது அவர்களுக்குள்ளாகவோ நடக்கும் பகிரங்க தகராறுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று சற்று முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அன்வார் கேட்டுக்கொண்டார்.

வாழ்க்கை செலவினப் பிரச்சனைகளில் ஹராப்பான் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

“மக்களைப் பின்தொடரும் வாழ்க்கைச் செலவுகளைப் புரிந்துகொள்வது, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குது மற்றும் மக்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றில், அனைத்து ஹராப்பான் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.

மக்கள் எப்பொழுதும் அவர்களைக் கவனித்து கொண்டிருப்பதை அன்வார் நினைவூட்டினார்.

“மக்கள் மற்றும் நாட்டின் தலைவிதியை மாற்றியமைப்பதில் ஹராப்பான் உண்மையிலேயே தகுதியுடையது என்பதை நிரூபிக்க, சிறிது இடமும் வாய்ப்புகளுமே நமக்கு உள்ளன,” என்று அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களாக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களிடையே அடிக்கடி விமர்சன அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருப்பது அறிந்ததே.

பொ வேதமூர்த்தி இராஜினாமா தொடர்பில் பல தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் லத்திஃபா கோயாவின் அறிக்கைக்குப் பின்னர், நூருல் இஸ்ஸா பதவி விலகியது தொடர்பிலான அறிக்கைகள் என ஊடகங்களில் ஹராப்பான் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள், சமீப காலமாக பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.