எண்ணெய் விலை யுஎஸ்$50-க்குக் கீழே குறைந்தால் பட்ஜெட் திருத்தப்படும்

கச்சா எண்ணெயின் சராசரி விலை பீப்பாய்க்கு யுஎஸ்50-க்குக் கீழே குறைந்தால் மட்டுமே அரசாங்கம் 2019 பட்ஜெட்டைத் திருத்தி வரையும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

எண்ணெய் விலை யுஎஸ்70-ஆக இருக்கும் என்ற அடிப்படையில்தான் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சு தயாரித்தது.

எண்ணெயின் சராசரி விலையைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர அன்றாட விலையை அல்ல என்றாரவர்.

“முன்பு எண்ணெய் விலை பீப்பாய்க்கு யுஎஸ்$52 இலிருந்து யுஎஸ்$72 ஆக உயர்ந்தபோடு    நாம் பட்ஜெட்டைத் திருத்தவில்லை. அதைப்போல்   இப்போது பீப்பாய்க்கு $72-இலிருந்து யுஎஸ்$52 ஆகக் குறைந்துள்ளதற்காக  பட்ஜெட்டைத்   திருத்தப்போவதில்லை.

“சராசரி விலை யுஎஸ்$50-க்குக் கீழே இறங்கினால் மட்டுமே பட்ஜெட்டைத் திருத்துவது குறித்து பரிசீலிப்போம்”, என லிம் இன்று ஜார்ஜ்டவுனில் கூறினார்.

எண்ணெய் விலை அடிக்கடி ஏற்ற இறக்கமாக இருந்தாலும் அது பீப்பாய்க்கு யுஎஸ்70 என்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்றே ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் என்றாரவர்.

“ (அமெரிக்க அதிபர்) டோனல்ட் ட்ரம்ப் ஏதாவது சொன்னாலே அது ( கச்சா எண்ணெய்) விலையை பாதிக்கிறது.

“இப்போதைக்கு சராசரி விலை யுஎஸ்$50-க்கு மேலே இருப்பதால் பட்ஜெட்டைத் திருத்த வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் விலைகளைத் தொடர்ந்து கண்காணிப்போம்”, என்றாரவர்.