இன, மதத் தீயைப் பற்றவைப்பது சுலபம், அணைப்பது கடினம் – மாட் சாபு

ஒருவருக்கொருவர் இடையே பகைமையை வளர்க்க வேண்டாம், குறிப்பாக மத, இனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், அது இத்தனை ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட சமாதானத்தைப் பாதிக்கும் என நாட்டு மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

சண்டைக்கான தீயைப் பற்றவைப்பது எளிதானது, ஆனால் அதனை அணைக்க நீண்ட காலம் பிடிக்கும் எனத் தற்காப்பு அமைச்சர், முகமட் சாபு கூறியுள்ளார்.

“கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை வைக்க ஓர் ஒப்பந்தத்தைச் செய்தது முதல், நம் நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைத்துள்ளது. எனவே, புதிய சண்டைகளை உண்டாக்க வேண்டாம்.

“ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள், ஆலோசனை, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் நடத்துங்கள், ஆனால் போர்க்கால நிலைக்கு வர வேண்டாம்,” என இன்று கோலாலம்பூரில், 52-வது இராணுவ நிரந்தரப் பணியாளர் மாநாட்டின் பட்டமளிப்பு விழாவில், சான்றிதழை வழங்குவதற்கு முன்னர் தனது உரையில் அவர் தெரிவித்தார்.

மக்கள் மத்தியிலான சண்டை சச்சரவுகள், ஒற்றுமையைக் குழைப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் முடக்கும் என்று அவர் கூறினார்.

“நாடு கொந்தளிப்பில் இருந்தால், யார் முதலீடு செய்ய விரும்புவார்கள், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, முதலில் பாதுகாப்பை மீட்க வேண்டும்,” என்றார் அவர்.

இதுபோன்ற சண்டை சச்சரவுகளால், சம்பந்தமில்லாத தரப்பினரும் பாதிக்கப்படுவாதாக அவர் தெரிவித்தார்.

“குறிப்பாக, இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இச்சம்பவங்களில் முன்னிலையில் நிறுத்தப்படுகின்றனர், அவர்கள் அந்தச் சண்டையைத் தொடங்கவில்லை எனினும், நேரிடையாக ஈடுபடுகின்றனர், பாதிப்புக்குள்ளாகின்றனர்,” என்றார் அவர்.

-பெர்னாமா