கடந்த வாரம், சரவாக், செரியன்-கலிமந்தான் எல்லைக்கு அருகே, இந்தோனேசியத் துருப்புக்கள் என அடையாளம் கூறிக்கொண்டு, ஆயுதமேந்தியிருந்த ஒரு குழுவினரால், 5 மலேசிய வெட்டுமரக்காரர்கள் கடத்தப்பட்டனர்.
இச்சம்பவம், கடந்த டிசம்பர் 11-ம் தேதி, எல்லைக்குச் சுமார் 400 மீட்டரில், கம்போங் டானாவ் மெலிக்கின், வோங் ரங்காய் காட்டிற்கு அருகே நடந்துள்ளதாக என்.எஸ்.தி. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியின் படி, இராணுவச் சீருடை அணிந்திருந்த ‘கடத்தல்காரர்கள்’, 15-லிருந்து 64 வயது நிரம்பிய அந்த வெட்டுமரக்காரர்களைக் கட்டாயப்படுத்தி, ‘தொயோத்தா ஹைலக்ஸ்’ வண்டியில் ஏற்றி, இந்தோனேசிய எல்லையைக் கடந்து, சுங்கை எந்தெலி இராணுவப் போஸ் கொமண்டோ நோக்கிச் சென்றுள்ளனர்.
எதிர்க்க முயன்றால் அவர்களைச் சுட்டு கொன்றுவிடுவதாக கடத்தல்காரர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
ஓர் இராணுவப் போஸ் கொமண்டோவில், அவர்களது ஆடைகளைக் களையச்சொல்லி, இந்தோனேசியக் காடுகளில் வெட்டுமரங்களைத் திருடியதாக அவர்களை ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர், அவர்கள் முகங்களை மூடி மறைக்க, கருப்பு துணிகளையும் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான ஒரு போலிஸ் அறிக்கையில், கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணத்தைச் சேகரிக்க, உடன் பிறந்தவர்களான இரண்டு வெட்டுமரக்காரர்களை அதே நாளில் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாகவும் என்.எஸ்.தி. செய்திகள் கூறுகின்றனர்.
அவர்களை விடுவிக்க RM10,000 செலுத்த வேண்டும் என்றும், கடத்தப்பட்ட சம்பவத்தை மலேசிய அதிகாரிகளிடமோ அல்லது நண்பர்களிடமோ சொல்லக் கூடாது, அப்படி சொன்னால் பிணையில் இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவ்விருவரிடமும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அவ்விருவரும், பாலாய் ரிங்கின்னில் மலேசிய இராணுவத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில், மீதமிருந்த மூவரும் மறுநாள் விடுவிக்கப்பட்டனர்.
மலேசிய எல்லைக்குள் அந்தக் கடத்தல் நடந்திருப்பதை சரவாக் போலிஸ் மற்றும் மலேசியத் துருப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மலேசியர்களைக் கைது செய்தது மற்றும் வெட்டுமரங்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைக் கண்டித்து, இந்தோனேசிய அரசாங்கத்திற்கு மலேசியா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளதாகவும் அச்செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.