பாஸ் இளைஞர் தலைவர் முகம்மட் காலில் அப்துல் ஹாடி, முஸ்லிம்கள் நாளை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளார். கிறிஸ்மஸ் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்றாரவர்.
முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் கிறிஸ்மஸ் வாழ்த்துகளைப் பதிவு செய்யவும் கூடாது. அது கிறிஸ்துவ சமயத்தை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்றும் அவர் சொன்னார்.
“கிறிஸ்மஸில் ஷிர்க் (உருவ வழிபாடு) அடையாளம் இருக்கிறது. அது இஸ்மாமிய போதனைகளுக்கு எதிரானது. இறைவனுக்குப் பிள்ளை இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். இது முஸ்லிம் நம்பிக்கைகளுக்கு எதிரானது.
“ஈசா நபி (ஜீசஸ்) கடவுளின் குழந்தை என்கிறார்கள்”, என நேற்றிரவு கோலா திரெங்கானுவில் உரையாற்றியபோது கூறினார்.
காலில், பத்து பூரோக் சட்டமன்ற உறுப்பினர் அத்துடன் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் மகனுமாவார்.
அவர் அப்படிக் கூற, சாபா பாஸ் டேவான் உலாமா தலைவர் முஸ்டாஹிம் அலிங், முஸ்லிம்கள், அதிலும் மதமாறியவர்கள், வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த அவர்களின் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் உறவுகளைத் தொடர்ந்து காத்து வர வேண்டும் என்றார்.
“சாபாவில் நாம் எல்லோரும் சேர்ந்தே கொண்டாட வேண்டும். இஸ்லாத்துக்கு மாறி வந்த கிறிஸ்துவர்கள் அவர்களின் பெற்றோரை மதிக்க வேண்டும், அவர்களோடும் மற்ற உறவினர்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டும்”, என்றவர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது.
மக்கள் ஒருவர் மற்றவரை மதித்தால் அமைதி நிலவும். திறந்த இல்ல உபசரிப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டும். விழாக் காலங்களில் ஒருவர் வீட்டுக்கு மற்றவர் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.