ரஃபிசி ஹராப்பானுக்கு உதவ வேண்டுமே ஒழிய, ஒதுக்கக்கூடாது

நாட்டை நிர்வகிப்பதில், ரஃபிசி ரம்லி பக்காத்தான் ஹராப்பானுக்கு உதவி செய்ய வேண்டுமே ஒழிய, அக்கூட்டணியை விமர்சிக்கக் கூடாது என தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் ரெட்ஷுவான் யூசோஃப் கூறியுள்ளார்.

“ரஃபிசி கெட்டிக்காரர், அவர் எங்களைத் தவறாக வழிநடத்தாது, ஒரு நல்ல திசையில் நாட்டை நிர்வகிக்க உதவ வேண்டும்,” என அவர் கூறியதாக ‘ஃப்ரீ மலேசியா டுடே’ மேற்கோள் காட்டியுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அமர்ந்தது முதல், டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் மத்திய அரசாங்கத்தின் புகழ் வீழ்ச்சி கண்டு வருகிறது எனும் ரஃபிசியின் கட்டுரை தொட்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

பிகேஆர்-இன் முன்னாள் துணைத் தலைவருமான ரஃபிசி, ‘இன்வோக்’ மலேசியா நடத்திய ஓர் ஆய்வில், கடந்த ஜூன் மாதத்தில் 73 விழுக்காடாக இருந்த மகாதிரின் புகழ், 53 விழுக்காடாக சரிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

“ஹராப்பான், அம்னோவைவிட அதிக மலாய்வாதமாகவோ அல்லது பாஸ்-ஐ விட அதிக இஸ்லாமிய அரசியலிலோ வெற்றி பெறாது, பொருளாதாரத் தளம்தான் நம் வலிமை.

“ஜிஇ14 முடிவுகள் எனது இந்த வாதத்தை அனுமதிக்கிறது.

“பெர்சத்து-ஐ மலாய்க்காரர்களின் ஜாம்பவானாக (ஹராப்பானில் ஆக இளைய கட்சியாக இருந்தபோதிலும், பெர்சத்துவிற்கு அதிக நாற்காலிகளும், மாநிலத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது) ஹராப்பான் காட்டினாலும், அந்த ‘மலாய் ஜாம்பவான்’ தகுதி, ஜிஇ14-ல், அதிகமான மலாய் வாக்குகளை ஹராப்பானுக்குத் திரட்டித் தரவில்லை,” என ரஃபிசி அண்மையில் எழுதியிருந்தார்.

‘விசாலமாக பார்க்கவும்’

பக்காத்தான் ஹராப்பான் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் பெரிய படத்தை ரஃபிசி பார்க்க வேண்டும், குறிப்பாக, ஹராப்பான் கூட்டணியின் முக்கியப் பிரதிநிதி என்ற வகையில் என ரெட்ஷுவான் கூறினார்.

மே 9, பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மகாதிரின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரஃபிசி மேற்கோள் காட்டியுள்ளது, ஹராப்பான் அரசாங்கத்தின் தோல்விக்கு ஓர் அறிகுறி அல்ல என அவர் மேலும் சொன்னார்.

“எல்லோரையும் நம்மால் திருப்திபடுத்த முடியாது.

“பலர் மகிழ்ச்சியடையவில்லை, இந்த நிலைமையை அரசாங்கத்தின் மீதான உயர்ந்த எதிர்பார்ப்புகளால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மாற்றத்தை ஒரு நொடியில் செய்ய முடியாது,” என்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது, ஒரு தலைவரின் புகழ் பொதுவாக உயர்ந்ததாகவே இருக்கும் என ரெட்ஷுவான் ரஃபிசிக்கு நினைவுபடுத்தினார்.

“துன் மகாதிர் தொடங்கிய புள்ளியை நீங்கள் பார்க்க வேண்டும். அவர் சிதறிகிடக்கும் சிதறல்களைச் சேகரித்து கொண்டுள்ளார், அதற்கு சிறிது காலம் பிடிக்கும்,” என அவர் தெரிவித்தார்.