பத்து பிகேஆர் சர்ச்சையைத் தீர்த்து வைக்க முன்வந்தார் தியான் சுவா

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பத்து எம்பி பி.பிரபாகரனும் அத்தொகுதி பிகேஆர் உதவித் தலைவர் ரோசன் அஸனும் சர்ச்சையிடுவதை நிறுத்திக் கொண்டு ஒருவர் மற்றவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பத்து பிகேஆர் தொகுதித் தலைவரான சுவா, அவ்விருவரும் பொதுவில் சர்ச்சையிட்டுக் கொள்வது தவறு என்றும் அதைக் காண வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.

“சர்ச்சை தொடர்வது கட்சியின் பெயரைக் கெடுக்கும் என்பதுடன் பத்து தொகுதி வாக்காளர்களுக்கான சேவையையும் அது பாதிக்கும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

பகிரங்க அறிக்கைகள் விடுப்பதற்குமுன் இருவரும் தம்மைக் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்றும் சுவா கூறினார்.

ரோசன் தான் பிரபாகரனின் செயலாளர் என்ற பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி அறிக்கை விடுத்ததுதான் சர்ச்சைக்கு மூலகாரணம்.

அதற்கு எதிர்வினையாக, பிரபாகரன், ரோசனைத் தன் செயலாளராக நியமிக்கவே இல்லை என்றுரைத்து அவர் “அகந்தை மிக்கவர்” என்றும் வருணித்தார்.

ரோசன் முன்பு பிகேஆர் இளைஞர் பகுதியின் தகவல் தலைவராக இருந்தவர். ரிபோர்மாசி இயக்கம் தொடங்கிய காலம் தொட்டே அதில் இருந்து வருபவர்.

பிரபாகரன் மே 11இல்தான் பிகேஆரில் சேர்ந்தார். மே 9 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு பத்து எம்பி ஆனார்.

சுயா போட்டியிட முடியாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததை அடுத்து பிகேஆர் பிரபாகரனைத் தனது வேட்பாளராக அங்கீகரித்தது.