‘நாங்கள் வேதாவை ஆதரிக்கிறோம்’ – சித்தி காசிம் பிரதமரிடம் மனு

இன்று காலை, சுமார் 50 பேர் கொண்ட குழு ஒன்று, வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் சித்தி காசிம் தலைமையில், புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், ஒற்றுமை துறையமைச்சர் பொ வேதமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குறிப்பாணையை ஒப்படைத்தது.

பிரதமர் துறையமைச்சரான வேதாவுக்குத் தங்கள் ஆதரவைக் காட்ட, 211 அரசு சாரா அமைப்புகள், அக்குறிப்பாணையில் கையெழுத்திட்டுள்ளதாக சித்தி கூறினார்.

“ஒற்றுமைத் துறை அமைச்சராக அவர் தனது வேலையைச் செய்யவில்லை என்று பலர் குறை கூறியப் போதிலும், திரைக்குப் பின்னால், அவர் பழங்குடி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, கடினமாகப் பணியாற்றி வருகிறார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

“சிலர் கூறுவதைப் போல், அவர் இந்துக்கள் மற்றும் இந்தியர்களுக்கான அமைச்சர் அல்ல, மாறாக, நாட்டில் ஒற்றுமையை வளர்க்க அனைவருக்குமாக பணியாற்றும் ஒருவர் என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.

“அவர் எந்த இனத்தவரையோ அல்லது பல்வேறு நம்பிக்கை கொண்ட எவரையும் ஒதுக்கியதாக நான் அறிந்ததில்லை,” என்று அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

காலை 11.30 அளவில், பிரதமரின் அரசியல் செயலாளர் மஹாதிர் அபு பாக்கார் யாஹ்யாவிடம் அவர்கள் மனுவைச் சமர்பித்தனர்.

சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில், வேதா ஒரு “கருப்பாடு”-ஆக ஆக்கப்பட்டதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நடந்த கலவரத்தில் முஹம்மட் ஆடிப் இறந்ததற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டி, வேதாவைப் பதவி விலகச் சொல்வது பலகீனமானச் செயல்.

“இது நம் நாட்டைப் பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளான இனவெறி மற்றும் மதத் தீவிரவாதத்தை நிவர்த்தி செய்வதிலிருந்து விலகுவதற்குச் சுலபமான ஒரு வழி ஆகும்,” என்று அவர் கூறினார்.