டிபிஎச் மரணம்மீது விரைவான விசாரணை தேவை- டிஏபி இளைஞர் அணி கோரிக்கை

அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதற்காக தியோங் பெங் ஹொக் மரணம் மீதான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று டிஏபி இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

அதன் செயல்குழு உறுப்பினர்களான லியோங் யு செங், டான் தியோங் ஈய், வூ கா லியோங் ஆகியோர் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில், தியோவின் மரணம்மீது விசாரணை நடத்த அமைச்சரவை ஜூன் மாதமே ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டினார்கள்.

“முறையீட்டு நீதிமன்றம், தியோவின் குடும்பதுக்கு ரிம600,000 கொடுக்குமாறு முன்னாள் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது என்றாலும், அவரின் உண்மையான ‘கொலையாளி’ நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அந்த வகையில் தியோவுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. அவரின் பிள்ளைக்கும் இப்போது வயது எட்டாகி விட்டது”, என்று அம்மூவரும் கூறினர்.

ஷா ஆலமில், முன்னாள் எம்ஏசிசி தலைமையகத்தில் விசாரணைக்காக இரவு முழுக்க தடுத்து வைக்கப்பட்டிருந்த தியோ, 2009, ஜூலை 16-இல் ஒன்பதாவது மாடியிலிருந்து விழுந்து இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

அவர், ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் உதவியாளராக இருந்தார்.