நஜிப்: எஸ்எஸ்டிதான் விலை உயர்வுக்கு காரணம், கேஎப்சி அதற்கு ஓர் உதாரணம்

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) போல் விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி)யில் வெளிப்படைத்தன்மை குறைவு அதுதான் சமூக ஊடகங்களில் கெண்டக்கி பொறித்த கோழி(கேஎப்சி) விலை உயர்ந்திருப்பதாக செய்தி பரவலாவதற்குக் காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.

கேஎப்சியே நேற்றிரவு அதன் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதற்கு எஸ்எஸ்டி சேர்க்கப்பட்டதுதான் காரணம் என்று விளக்கமளித்திருப்பதாக நஜிப் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

“மக்கள், அவர்களுக்குக் கொடுக்கப்படும் ரசீதில் வரி வசூலிக்கப்படுவது குறிக்கப்பட்டு இருக்காது என்றாலும், தங்கள்மீது எஸ்எஸ்டி விதிக்கப்படுவதை உணரத் தொடங்கி விட்டார்கள்.

“பொருள்களின் விலை உயர்ந்துள்ளது அல்லது உயரும், ஆனால் பலர் அதை உணர்வதில்லை, ஏனென்றால் செலுத்தப்படும் வரி தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை”, என்று பெக்கான் எம்பி கூறினார்.

“பெரும்பான பொருள்களுக்கும் சேவைகளுக்கும் எஸ்எஸ்டி-இன்கீழ் வரி விதிக்கப்படாது, விதிக்கப்பட்டாலும் வரித்தொகை ஜிஎஸ்டியை விடக் குறைவாகவே இருக்கும் என நிதி அமைச்சர் பிரச்சாரம் செய்வதில் உண்மையில்லை”, என நஜிப் கூறினார்.

இதனிடையே, கேஎப்சி அதன் உணவுப் பொருள் விலைகள் படுவேகமாக விலை உயர்ந்து விட்டதாகக் கூறப்படுவதை நேற்றிரவு மறுத்தது.