அடிப் மரணம் மீதான விசாரணை விரைவில் நடத்தப்படும், முகைதின் கூறுகிறார்

காலஞ்சென்ற தீயணைப்புப் படை வீரர் முகம்மட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் மூலகாரணங்களைக் கண்டறிவதற்காக ஒரு முழு விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என்பதை உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார்.

சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸுடன் கலந்தாலோசித்தப் பிறகு அது குறித்து தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக முகைதின் தமது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மரணத்திற்கான காரணம் என்ன என்பதைத் தீர்மானிப்பதற்காக கிரிமினல் நடைமுறை விதிகள் செக்சன் 339(1) கீழ் தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் ஒரு விசாரணை நடத்தும்படி தாம் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப் போவதாக ஏஜி தம்மிடம் தெரிவித்துள்ளதாக முகைதின் தெரிவித்தார்.

ஏஜியைத் தவிர்த்து, போலீசாரும் அவர்கள் மேற்கொண்டிருக்கும் விசாரணையின் நிலைமை குறித்து தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் முகைதின் கூறினார்.

சுபாங் ஜெயா சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியமன் கோவிலில் நடந்த கலவரத்தில் தீயணைப்பு படை வீரர் 24 வயதான அடிப் கொல்லப்பட்டார்.