‘திருடர்களும் கொள்ளைக்காரர்களும் சேர அனுமதிக்கப்பட்டால், நான் பெர்சத்துவிலிருந்து விலகுவேன், சைட் சடிக் கூறுகிறார்

 

பெர்சத்துவில் ‘திருடர்களும் கொள்ளைக்காரர்களும்’ சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன் என்று பெர்சத்துவின் இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சடிக் கூறுகிறார்.

எந்தத் திருடர்களும் கொள்ளைக்காரர்களும் பெர்சத்துவில் சேர்ந்தால், நானே அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன். அம்மாதிரியான ஒன்று நடப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். பெர்சத்துவின் தலைமைத்துவம் இதில் நூறு விழுக்காடு உடன்பாடு கொண்டிருக்கிறது என்று சைட் புத்ரா ஜெயாவில் இன்று ஒரு நாளிதழுடனான நேர்காணலில் கூறினார்.

இந்த விவகாரத்தில் பெர்சத்துவின் தலைவர்கள் மகாதிர் மற்றும் முகைதின் யாசின் ஆகியோர் இதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர், அதாவது பெர்சத்துவில் இணைவதற்காக அம்னோவிலிருந்து வெளியேறுகிறவர்கள் ஒவ்வொருவரும் கடும் சோதணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அம்னோவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைவதற்கு முன்பு அவர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதோடு அவர்கள் தங்களுடைய சொத்துக்ளையும் அறிவிக்க வேண்டும் என்றாரவர்.

நம்முடன் இருக்க விரும்புகிறவர்கள் நன்னெறி உடையவர்களாகவும் நம்பக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெர்சத்துவில் இணைவதற்கு முன்னதாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் தாம் வலியுறுத்தும் மிக முக்கியமானது அவர்கள் மக்களுக்கு துரோகம் செய்யவே கூடாது என்பதாகும்.

பெர்சத்துவில் சேர விரும்புகிறவர்கள் போலீஸ் மற்றும் எம்எசிசி விசாரணையில் சிக்கியவர்களாக இருக்கக்கூடாது.

நாம் பண அரசியல் கலாச்சாரத்தையும் ‘பழைய’ அரசியலையும் ஏற்றுக் கொண்டால் இறுதியில் பெர்சத்துவின் முடிவு அம்னோவின் முடிவைப் போன்றதாகத்தான் இருக்கும் என்று கூறிய சைட் சடிக், அதனால்தான் அம்னோ 2.0 இருக்கவே கூடாது என்று தாம் வலியுறுத்துவதாக அவர் மேலும் கூறினார்.