கேஎப்சி, மெக்டோனடல்ஸ்மீது அமைச்சு விசாரணை

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, விரைவு உணவுப் பொருள் விற்பனை செய்யும் கேஎப்சியும் மெக்டோனல்ட்’ஸும் பொருள் விலைகளை உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தும்.

அமைச்சின் அமலாக்கப் பிரிவுத் துணை இயக்குனர் இஸ்கண்டார் ஹாலிம் சுலைமான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேஎப்சி விற்பனை செய்யும் இடங்களுக்குச் சென்று சோதனை செய்வதாகக் கூறினார். அவர்கள் விரைவில் மெக்டோனல்ட்’ஸ் மையங்களுக்கும் செல்வர்.

“காலையிலேயே வேலையைத் தொடங்கி விட்டோம். என் அதிகாரிகள் கேஎப்சி-இடம் விலைகளை உயர்த்தியது ஏன் என்று விசாரித்தார்கள்”, என்றவர் கூறியதாக அஸ்ட்ரோ அவானி செய்தியில் கூறப்பட்டது.

கேஎப்சி போலவே மெக்டோனல்ட்ஸும் விலைகளை உயர்த்தி இருப்பதாக அச்செய்தி குறிப்பிட்டது.

“விலை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுவதால் மெக்டோனால்ட்ஸையும் விசாரிப்போம்”, என்றாரவர்.

நேற்று, கேஎப்சி உரிமையாளரான QSR Brands (M) Holdings Bhd, விலைகளில் “சிறிதளவு திருத்தங்கள் செய்திருப்பதாக” ஓர் அறிக்கையில் கூறி இருந்தது.

அதன் பொருள் விலைகள் பெருமளவு உயர்ந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியதை அடுத்து அந்நிறுவனம் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இன்று அதே நிறுவனம் தன்னுடைய அறிக்கை திரித்துக் கூறப்பட்டுள்ளதாக கூறியது.