அமைச்சரவை 2019-இல் சாலைக்கட்டணத்தை உயர்த்த தகுதிபெற்ற 21 நெடுஞ்சாலைகளில் கட்டணை உயர்வை முடக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார்.
டிசம்பர் 12-இல் அமைச்சரவை எடுத்த அம்முடிவால் சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு ரிம972.75 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும் என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
2019 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது லிம், நகரங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டும் டோல் கட்டண உயர்வு முடக்கி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதுனுடன் இப்போது இந்த நல்ல செய்தியும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
“இந்த விரிவான சாலைக்கட்டண உயர்வு முடக்கம், வாழ்க்கைச் செலவின உயர்வால் மலேசியர்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைப்பதற்கு பக்கத்தான் ஹரப்பானால் வழிநடத்தப்படும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்றாகும்”, என்றாரவர்.
மே மாத பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னதாக, ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் நாடு முழுக்க சாலைக்கட்டணம் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.