கைது செய்யப்படலாம் என அஞ்சி, கோயில் கலவரத்தின் சாட்சிகள் வெளிவர தயக்கம்

சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்தின் சாட்சிகள், போலிஸ் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் எனும் பயத்தில் சாட்சியம் அளிக்க வர மறுப்பதாக ஆர்வலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று, ஊடகவியலாளர்களிடம் பேசிய எ இளங்கோவன், இச்சம்பவம் தொடர்பில், போலிஸ் சிலரைக் காவலில் வைத்ததன் அடிப்படையில் இதனைக் கூறுவதாகத் தெரிவித்தார்.

“முன்னதாக, சாட்சிகளிடம் பல வீடியோக்கள் மற்றும் சான்றுகள் இருந்தன, ஆனால் இப்போது அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற பயத்தால், அதனை வெளியிட தைரியம் இல்லாமல் இருக்கின்றனர்,” என்று இன்று, கோலாலம்பூரில், மனித உரிமை ஆணயத்திடம் (சுஹாகாம்) ஒரு மனுவைச் சமர்ப்பித்த பிறகு தெரிவித்தார்.

கலவரத்தின் போது, முகநூலில் சம்பவத்தைப் பதிவேற்றிய 30 முதல் 35 பேர் வரை, போலீசாரிடம் சாட்சியம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களில் சிலர் 3 முதல் 11 நாள்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகவும் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்துரைக்க, மலேசியாகினி காவல்துறையைத் தொடர்பு கொண்டது.

முன்னதாக, காவல்துறை தலைவர், முகம்மட் ஃபுஸி ஹருன், கலவரத்தில் 42 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 24 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரத்தில், சாட்சிகளை சுஹாக்காம்-ஆல் பாதுகாக்க முடியுமா? நடுவராக செயல்பட்டு, சாட்சிகளின் தகவல்களைப் போலிசாரிடம் சேர்க்க முடியுமா என மனுவைக் கையளித்தபோது, இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, பொதுமக்களிடமிருக்கும் அனைத்து ஆதார வீடியோக்களையும் சேகரித்து, மக்கள் பிரதிநிதியாக அவற்றைப் போலிசாரிடம் சமர்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, கலவரம் தொடர்பான போலிசாரின் விசாரணையில் சுஹாக்காம் தலையிடாது என்றும் சாட்சிகள் கைதுசெய்யப்படாமல் இருப்பதைத் தங்களால் உறுதிசெய்ய முடியாது என்றும் சுஹாக்காம் தலைவர், ரஸாலி இஸ்மாயில் கூறியுள்ளார்.

இருப்பினும், இளங்கோவன் திரட்டிக் கொடுக்கும் சாட்சியங்களைப் போலிசாரிடம் ஒப்படைக்க அவர் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் அந்த வீடியோக்களைப் பார்த்துவிட்டு, அவற்றைக் காவல்துறையிடம் ஒப்படைப்போம்,” என ரஸாலி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சாட்சிகள் தங்கள் ஆதாரங்களை வழங்க, 017 299 1724 என்ற எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம் என இளங்கோவன் தெரிவித்தார். மேலும், சாட்சிகளின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கோயில் கலவரம் மீது சுஹாக்கம் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், தீயணைப்பு வீரர் முகமட் ஆடிப்பின் பிரேத பரிசோதணை அறிக்கையை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருவதால், அக்கோரிக்கைகளை சுஹாக்காம் மறுத்துள்ளது.

மலேசிய இந்திய எக்‌ஷன் ஃபோர்ஸ், மலேசிய இந்திய இளைஞர் மன்றம் மற்றும் இந்து வழக்கறிஞர் சங்கம் உட்பட 30 அரசு சாரா இயக்கங்கள் அம்மனுவில் கையெழுத்திட்டுள்ளன.