பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் வார இறுதியில் நடைபெறும் அக்கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில்(ஏஜிஎம்) பேராளர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்.
திங்கள்கிழமை ஊடகங்களிடம் பேசிய முகைதின், பேராளர்கள் அக்கூட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பெர்சத்துவையும் பக்கத்தான் ஹரப்பானையும் வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மற்றவற்றோடு உறுப்புக் கட்சிகளுக்கிடையே அணுக்கமான ஒத்துழைப்புயும் புரிதலையும் ஏற்படுத்திக்கொண்டு ஹரப்பானை வலுப்படுத்தி, ஒரு குழுவாக செயல்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் என்று முகைதின் விளக்கினார்.
அரசாங்கம் அதன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு வலுவான குழு தேவை.
வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று. அதற்கு வழிவகை காணப்பட வேண்டும்.
“இதை முக்கியமாகக் கருதுகிறோம். நாடு முழுவதிலுமிருந்து வரும் பேராளர்களுக்கு மக்களின் குரலாக விளங்க வேண்டும் என்று நினைவுபடுத்தப்பட்டுள்ளது”, என்றாரவர்.
2016 -இல் அமைக்கப்பட்ட பெர்சத்துவுக்கு இது இரண்டாவது ஏஜிஎம்- ஆகும்.