இன்று காலை சுங்கை பீசி நெடுஞ்சாலை(பெஸ்ராயா)யில் அங்குள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் எண்ணெய் நிரப்பிய சுமார் 20 கார்கள் ஓட முடியாமல் பழுதடைந்து நின்றன.
அச்சமபவம் தொடர்பில் பெட்ரோனாஸ் டாகாங் பெர்ஹாட் “பொருளில் ஏற்பட்ட கோளாறுக்காக” சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
“சுமார் 20 கார்கள் சோலாரிஸ் பெஸ்ராயா பெட்ரோனாஸ் நிலையத்தில் எண்ணெய் நிரப்பிய பின்னர் பழுதடைந்து நின்று விட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
“தொடக்க ஆய்வுகள் அந்தக் குறிப்பிட்ட நிலையத்தில் பொருளில் ஏற்பட்ட கோளாறுதான் அதற்குக் காரணம் என்று காண்பிக்கின்றன. விசாரணை தொடர்வதால் பெட்ரோனாஸ் சோலாரிஸ் பெஸ்ராயா தற்காலிகமாக மூடப்படுகிறது.
“இதை ஒரு கடுமையான விவகாரமாகக் கருதுகிறோம், இதனால் தொல்லைக்குள்ளான வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.
“பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு முறைப்படி இழப்பீடு வழங்கப்படும்”, என பெட்ரோனாஸ் டாகாங்கான் கூறியது.
அந்நிறுவனம் கார்கள் பழுதடைந்து நின்று போனதற்கான சரியான காரணத்தைச் சொல்லவில்லை. ஆனால், வலைமக்கள் விடுவார்களா. சமூக ஊடகங்களில் ஊகங்கள் பறக்கின்றன. பெட்ரோல் சேமிப்புத் தாங்கிகள் சரியாக அடைக்கப்படாமல் நீர் எரிபொருளுடன் சேர்ந்து விட்டது என்கிறார்கள் சிலர். வேறு சிலர், பெட்ரோலுடன் டீசல் தவறுதலாக சேர்ந்து விட்டதுதான் காரணம் என்றார்கள்.