உயர் நீதிபதிகள் நால்வர், தங்களின் பணியை 70 வயது வரை தொடரும் வகையில், மத்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் புத்ராஜெயாவிடம் பரிந்துரைத்துள்ளார்.
நாட்டு நலனுக்கான பரிந்துரை இது என்பதால், மக்கள் அவை மற்றும் செனட் சபையின் 2/3 ஆதரவை பெற முடியும் என்றும் அவர் சொன்னார்.
“இது அரசியல் நோக்கமற்ற பரிந்துரை என்பதால், எதிர்க்கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவிப்பர்,” என அவர் கூறியதாக ஃப்.எம்.தி. செய்திகள் கூறுகின்றன.
நீதிபதிகளின் ஓய்வு வயது 66, யாங் டி-பெர்த்துவான் அகோங் ஒப்புதல் அளித்தால், அதனை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம்.
அடுத்தாண்டு ஏப்ரலில் தலைமை நீதிபதி, ரிச்சர்ட் மலாஞ்ஞும் மே மாதத்தில் ஜஹாரா இப்ராஹிம்மும் ஓய்வுபெறவுள்ளனர், இவர்களுக்கு ஏற்கனவே 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருந்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், அஹ்மாட் மாரூப் மற்றும் சபா, சரவாக் தலைமை நீதிபதி டேவிட் வோங் டாக் வா, அடுத்தாண்டு முறையே மே மற்றும் ஆகஸ்ட்டில் ஓய்வுபெற உள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஃபெடரல் நீதிமன்ற நீதிபதிகளான, ரம்லி அலி, பாலியா யூசோப் வாஹி மற்றும் அலிஜாதுல் காய்ர் ஒஸ்மான் ஆகிய மூவரும் அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வுபெறவுள்ளனர்.
இந்தப் பணி ஓய்வுகளுக்கு மத்தியில், 2014-ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்ற, மூத்த ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியான அஸாஹார் முகமட் ஒருவர் மட்டுமே, 2022-ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவார்.
இரண்டாவது மாற்று வழியாக, மலாஞ்ஞும் ஓய்வு பெற்றபின், வழக்கறிஞர் மன்றத்தின் மூத்த வழக்கறிஞரை, தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று ஃபெடரல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய ஸ்ரீ ராம் கூறினார்.
இருப்பினும், அவர் சட்டத்தில் ஆர்வமுள்ளவராகவும் நல்ல தீர்ப்பை எழுதும் திறனுடன், ஒரு நல்ல நிர்வாகியாகவும் இருக்க வேண்டும் என்றார் ஸ்ரீ ராம்.
மூன்றாவது வழி, தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளில் ஒருவரை தெரிவு செய்து, தலைமை நீதிபதியாக நியமிப்பது, இதற்கான வேட்பாளர்களை உயர்நீதிமன்றத்தில் கண்டுபிடிக்கலாம்.
இதற்கிடையில், வழக்கறிஞர் மன்றத் தலைவர், ரகுநாத் கேசவன், நிர்வாக அலுவலகத்தில் அவர்கள் நியமனம் மிகவும் குறுகிய காலத்தில் இருந்தால், எந்தவொரு சீர்திருத்தத்தையும் அடைய முடியாது என்று கூறினார்.
“சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு இணக்கமான, வலுவான ஒரு நீதிபதியே நமக்குத் தேவை,” என்றும் அவர் கூறினார்.
சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட, மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில், வேட்பாளர்கள் தேர்வு செய்யலாம் என்று ரகுநாத் கூறினார்.