மலாய்க்காரர்களின் நலன்களைப் பெர்சத்து பாதுகாக்கும் – டாக்டர் மகாதீர்

இந்த நாட்டில் மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு மலாய் கட்சி தேவை என அச்சமூகம் இன்னும் நம்புவதால், பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து), மலாய்க்காரர்களுக்கான கட்சியாக உருவானது என அக்கட்சியின் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“அவர்கள் (மலாய்க்காரர்கள்) அவர்களைப் பாதுகாக்க ஒருவர் தேவை என எண்ணுகின்றனர்…. மலாய்க்காரர்களால் மட்டுமே அவர்களைப் பாதுகாக்க முடியும் எனவும் நம்புகின்றனர், அதனால் அவர்களுக்கு இந்தக் கட்சி தேவைப்படுகிறது.

“நாம் (பெர்சத்து) அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், நமக்கு (பக்காத்தான் ஹராப்பான்) அவர்களின் ஆதரவு கிடைக்காது, நாம் எப்போதும் தோற்றுப்போக வேண்டிவரும்,” என புத்ராஜெயாவில், தனது அலுவலகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடக நிறுவனங்களுடனான ஒரு நேர்காணலில் டாக்டர் மகாதிர் கூறினார்.

தானும் இன்னும் சில முன்னாள் அம்னோ தலைவர்களும் இணைந்து, பெர்சத்து கட்சியை உருவாக்கி, அது மலாய்க்காரர்களுக்கானது என்பதை வலியுறுத்தவில்லை என்றால், 14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனலும் நஜிப்பும் நிச்சயம் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள் என மகாதீர் சொன்னார்.

“13-வது பொதுத் தேர்தலில், பெரும்பான்மை அல்லது பிரபலமான வாக்குகள் எதிர்க்கட்சிக்குக் கிடைத்த போதும், தேர்தல் தொகுதி அமைப்பு முறை காரணமாக, பிஎன் தேர்தலில் வென்று, ஆட்சி அமைத்தது…. ஆனால், அவர்கள் திறனற்ற திருட்டு அரசாங்கத்தை அமைத்தனர்,” எனப் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான மகாதீர் கூறினார்.

அம்னோவைப் போல பெர்சத்து கட்சியால் மலாய்க்காரர்களின் வாக்குகளைத் திரட்ட முடியுமா என்ற கேள்விக்கு, மலாய்க்காரர்கள் எப்போதும் பலமான கட்சியையே நாடுவார்கள், பொதுத் தேர்தலுக்கு பின்னர் அம்னோ பலம் குன்றிபோயுள்ளது, அதன் தலைவர்கள் மற்றும் எம்பி-க்கள் கட்சியிலிருந்து விலகுகிறார்கள் என மகாதீர் தெரிவித்தார்.

“பெர்சத்து மலாய்க்காரர்களின் கட்சி. மற்றவை எல்லாம் (ஹராப்பான் உறுப்புக் கட்சிகள்) பல்லினக் கட்சிகள். அதனால் அவர்கள் (மலாய்க்காரர்கள்) பெர்சத்துவில் சேர விரும்புகிறார்கள். அவர்களால் அம்னோவில் தொடர்ந்து இருக்க முடியாது…. அம்னோவின் காலம் முடிந்தது.

“மலாய்க்காரர்கள் பயப்படுகிறார்கள், அவர்கள் அச்சுறுத்தப்படுவதாக நினைக்கிறார்கள். அவர்கள் சிறுபான்மையாக இருந்தால், நாட்டில் சமத்துவம் மற்றும் சமமான சேவை அடிப்படையில், அவர்களால் எதையும் பெற முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

“அதனால்தான், அவர்கள் ஒரு கட்சியைத் தேடுகிறார்கள். அவர்கள் (மலாய் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள்) கெஅடிலான் (பிகேஆர்) மற்றும் அமானாவில் சேர முடியாது, ஏனென்றால் அவர்கள் பல்லினக் கட்சிகளை ஏற்க விரும்பவில்லை, நிச்சயமாக அவர்கள் டிஏபி-இல் சேர முடியாது. எனவே, அவர்களின் தேர்வு என்ன?” என்று அவர் கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான மக்கள், குறிப்பாக அம்னோவின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர்கள் பெர்சத்துவில் சேர விரும்புவது பற்றி கேட்டபோது, “பெர்சத்து ஒரு மலாய் மற்றும் பூமிபுத்ரா கட்சி, ஆக மலாய் பூமிபுத்ராவாக இருக்கும் யாரும் பெர்சத்துவில் ஓர் அங்கமாக இருக்கலாம்,” என்று டாக்டர் மகாதிர் கூறினார்.

“ஆனால், ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் நமது சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இது ஒரு சுத்தமான மற்றும் ஊழல் அற்ற கட்சியாகும், மக்களுக்கு அர்ப்பணிப்போடு சேவை செய்வதே எமது குறிக்கோள், எனவே, இந்தக் கொள்கைகளை ஏற்றுகொள்ளும் எவரையும் நாம் ஏற்றுக்கொள்வோம்,” என்றார் அவர்.

கடந்த பொதுத் தேர்தலில், பெர்சத்து நல்ல செயல்திறனைக் காட்ட முடியவில்லை, 13 நாடாளுமன்றங்களை மட்டுமே வெல்ல முடிந்தது, முந்தைய அரசாங்கம் கட்சியின் பதிவை இரத்து செய்ததே இதற்கு காரணம் என்று மகாதிர் சொன்னார்.

“நாங்கள் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்டோம். அதனால், நிறைய இடங்களில் தோற்றுப்போனோம். உதாரணத்திற்கு, கெடாவில் நான் நின்ற லங்காவி மற்றும் என் மகன், முக்ரிஸ் போட்டியிட்ட இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தோல்வியைத் தழுவினோம். காரணம், போட்டியிடுவது யார் என்று, மக்களுக்குத் தெரியவில்லை.

“ஆனால், இப்போது நாம் பதிவு பெற்றக் கட்சி. நமது சின்னத்தையும் கொடியையும் நம்மால் காட்ட முடியும், ஆனால் ஹராப்பான் உறுப்புக் கட்சியாக நாம் போட்டியிட்டால், இப்போது ஹராப்பானுக்கென்று தனி சின்னம் உள்ளது. 14-வது பொதுத் தேர்தலைப் போல, நாம் கெஅடிலானின் சின்னத்தில் போட்டியிடும் கட்டாயம் இல்லை,” என்று அவர் மேலும் சொன்னார்.

பெர்சத்து அமைச்சரவை உறுப்பினர்களின் செயல்திறன் குறித்து பேசியபோது, 13 இடங்களை மட்டுமே வென்றபோதும், அமைச்சரவையில், மற்றக் கட்சிகளுக்கு இணையாக, அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக மகாதிர் தெரிவித்தார்.

“அமைச்சரவையில் நமக்கு 6 உறுப்பினர்கள் இருக்கிறார்கள், மற்றக் கட்சிகளைப் போல. அவர்கள் புதியவர்கள், அடிக்கடி என்னைச் சந்தித்து ஆலோசனை கேட்டு வருகின்றனர். சில சமயங்களில் ஆர்வத்தின் காரணமாக, அவர்கள் சில அறிக்கைகளைத் தவறாக வெளியிடுகின்றனர். புதியவர்களிடம், உடனே நீங்கள் நிபுணத்துவப் பணியை எதிர்பார்க்க முடியாது, அவர்கள் செய்யும் தவறுகளை திருத்த முடியும்,” என்றார் அவர்.

கட்சியில் இளையத் தலைமுறை பற்றி கூறியபோது, “மலேசிய வரலாற்றில், 25 வயதில் ஒருவர் அமைச்சரானதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள், அதைப் போன்றே பெண்கள், தற்போது 4 பெண் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்,” என்றார்.

கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் நேற்றிரவு தொடங்கியது. தேசிய மாநாடு, டாக்டர் மகாதீரின் அதிகாரப் பூர்வத் திறப்புரையுடன் இன்றிரவு தொடங்கி, நாளை வரை நடைபெறும்.

நாடு முழுவதும் இருந்து, 135 தொகுதிகள் மற்றும் இளைஞர், மகளிர் பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • பெர்னாமா