ஜிஇ15வரை மகாதிர் பிரதமராக இருக்க வேண்டும்: பெர்சத்து ஏஜிஎம்-மில் பேராளர்கள் கோரிக்கை

புத்ரா ஜெயா பெர்சத்து ஆண்டுக் கூட்டத்தில் டாக்டர் மகாதிர் முகம்மட் இத்தவணை முழுக்க பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

கிளந்தான் பேராளரும் பாச்சோக் தொகுதித் தலைவருமான சுல்கிப்ளி சக்கரியா அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.

மகாதிர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் முன்மொழியப்பட்டு இன்று விவாதிக்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் கூறின.

அது குறித்து பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினரும் பிரதமரின் அரசியல் செயலாளருமான ஜாஹிட் முகம்மட் அரிப்பைச் சந்தித்து வினவியதற்கு, அவர் சிரித்து விட்டு கட்சி பிறகு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என்று கூறிச் சென்றார்.

மகாதிரை அடுத்து பிரதமராவதற்குத் தயாராக அக்டோபரில் போர்ட் டிக்சன்
இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுக் காத்திருக்கிறார் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்.

மகாதிர் ஈராண்டுகளுக்குப் பிரதமராக இருப்பது, பிறகு பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உடன்பாடுதான்.

ஆனால், அன்வார் தாம் பிரதமராவதற்கு அவசரப்படவில்லை என்று பலமுறை கூறி விட்டார். இப்போதைக்கு அவர் நாடாளுமன்ற முறையில் சீரமைப்புச் செய்வதற்கு அரசாங்கத்துக்கு உதவுவதில்தான் கவனம் கவனம் செலுத்தி வருகிறாராம்.