‘எப்படியாவது வெற்றி பெறுவதே’ முக்கியம் என்று பெர்சத்து விபி கூறக் கேட்டு பெர்சே அதிர்ச்சி

“நேர்வழியோ குறுக்கு வழியோ எப்படியாவது” வெற்றி பெறுவதே முக்கியம் என்பதால் அதற்காக கட்சி அரசாங்க வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பெர்சத்து உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறியிருப்பதைக் கேட்டு பெர்சே அதிர்ச்சி அடைந்தது.

ரஷிட்டின் கூற்று பக்கத்தான் ஹரப்பான் சீரமைப்புச் செய்வதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்று ஐயம் கொள்ள வைக்கிறது என பெர்சே கூறிற்று.

“ரஷிட்டும் அவரைப் பாராட்டும் பேராளர்களும் ஏழு மாதங்களுக்குமுன் மலேசிய மக்கள் எதற்காக அம்னோ/பிஎன் அரசாங்கத்தை நிராகரித்தார்கள் என்பதை மறந்து விட்டார்களா?” , என்று தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே ஓர் அறிக்கையில் வினவியது.

நேற்றைய பெர்சத்து ஆண்டுக் கூட்டத்தில், ரஷிட்- அரசாங்கத்தின் தேர்தல் சீரமைப்புக் குழுவுக்கு இவர்தான் தலைவர்- அரசாங்கக் குத்தகைகள் வேண்டும் மற்றும் பதவி வேண்டும் என்ற பேராளர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளுவது “மடத்தனம்” என்றார்.

“அது மடத்தனம் என்பதே என் கருத்து. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறுவதே முக்கியம்”, என்று ரஷிட் கூறியதைப் பேராளர்கள் கரவொலி எழுப்பிப் பாராட்டினர்.

பெர்சே அதன் அறிக்கையில் ஊழலின் வேரை அறுக்க சீரமைப்புச் சட்டங்களை விரைந்து கொண்டு வருமாறு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கேட்டுக்கொண்டது.

“அரசாங்கத்தைக் கட்சியின் விருந்து சாப்பாடாக நினைக்கும் கலச்சாரத்தையும் மனப்போக்கையும் பிரதமர் தடுத்து நிறுத்த வேண்டும். தவறினால், புதிய அரசாங்கமும் பழைய அரசாங்கம்போல் ஆகி விடும்”, என்றது வலியுறுத்தியது.