விற்பவர் வாங்குவோர் நலன்களைக் கருத்தில்கொண்டு பெட்ரோல் விலைகள் நிர்ணயிக்கப்படும்

பெட்ரோல் விலைகள் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்படும்.

இதைத் தெரிவித்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் பெட்ரோல் விலைகளைக் குறைக்க விரும்பினாலும் அதற்குமுன் சிலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

“நாங்கள் (அரசாங்கம்) பெட்ரோல் விலையைக் குறைக்கத்தான் விரும்புகிறோம் ஆனால், அதை விற்பவர்களும் ஆதாயம் காண வேண்டும், ஆதாயம் இல்லையென்றால் அவர்கள் விற்க மாட்டார்கள் நமக்கும் பெட்ரோல் கிடைக்காது.

“எனவே, விலை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இணக்கமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது”, என்று மகாதிர் இன்று லங்காவியில் கூறினார்.

நேற்று, நிதி அமைச்சர் லிம் குவான் எங் ரோன்97, ரோன்95, டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இராது என்று ஓர் அறிக்கையில் கூறினார். அவை முறையே ரிம2.50, ரிம2.20, ரிம2.18 என்ற நிலையிலேயே அடுத்த அமைச்சரவைக் கூட்டம்வரை தொடரும்.