மைபிபி தலைவர் எம். கேவியெஸ் எதிர்வரும் கேமரன் மலை இடைத் தேர்தலில் தாம் போட்டியிட்டால் அதன்பிறகு பிஎன் மஇகா வேட்பாளரை அங்குக் களமிறக்காது என்று நம்புகிறார்.
“நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் பிஎன் அந்த இடத்தை மஇகாவுக்குக் கொடுக்காது. இது என் கருத்து. அது தப்பாகவும் இருக்கலாம்.
“நான் நான்காண்டுகளாக அங்கு பணியாற்றி வந்திருப்பது அவர்களுக்குத் தெரியும். அங்குள்ள மக்களை நான் நன்கு அறிவேன்.
“யோசித்துப் பார்த்தால் அது ( அவர்கள் ஒரு வேட்பாளரை நிறுத்துவது) தப்பு. அங்கு மஇகா-வைவிட எனக்குத்தான் மதிப்பு அதிகம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கேமரன் மலையில் பல்லாண்டுக் காலம் சேவை செய்திருப்பதால் வாக்காளரிடையே தமக்குச் செல்வாக்கு உண்டு என்று நம்பும் கேவியெஸ், மஇகாவின் உள்கட்சிச் சண்டைகளே அக்கட்சிக்குக் கேடாய் அமையும் என்றார்.
14வது பொதுத் தேர்தலுக்குமுன் கேவியெஸ் கேமரன் மலை தொகுதி தனது கட்சிக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று கடுமையாக போராடினார். ஆனால், அத்தொகுதி மஇகாவின் சி,சிவராஜுக்குக் கொடுக்கப்பட்டது.
.
அதன்பின் கேவியெஸ் மைபிபிபி தலைவர் பதவியைத் துறந்தார். பிறகு மீண்டும் கட்சியில் இணைந்து மைபிபிபி பிஎன் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிப்பதற்கு மைபிபி உச்சமன்றம் இன்று பிற்பகல் கூட்டம் நடத்துகிறது.
அதில் கட்சி தம்மையே வேட்பாளராக தேர்ந்தெடுக்கலாம் என்றவர் நம்புகிறார்.