கேமரன் மலைக்கு அமைச்சர்களின் படையெடுப்பு

கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு இன்னும் 20 நாள்கள் உள்ளன. ஆனால், அதற்குள் அத்தொகுதியை நோக்கி அமைச்சர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதிலிருந்து அத்தேர்தல் எவ்வளவும் முக்கியமானது என்பதை உணரலாம்.

பிஎன் கடந்த இரு தேர்தல்களிலும் குறுகிய பெரும்பான்மையில் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மே 9-இல், அத்தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 42.32 விழுக்காட்டைப் பெற்று பிஎன் பக்கத்தான் ஹரப்பானைத் தோற்கடித்தது. ஹரப்பானுக்கு 39.87 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

கடந்த பொதுத் தேர்தலுக்குமுன் நடந்துள்ள நான்கு இடைத் தேர்தல்கள்போல் அல்லாது கேமரன் மலைக்கான இந்த இடைத் தேர்தல் முதல்முறையாக பிஎன் ஆட்சியில் உள்ள ஒரு மாநிலத்தில் நடைபெறுகிறது.

இப்போது புரிந்திருக்குமே அமைச்சர்கள் ஏன் அத்தொகுதிமீது படையெடுக்கிறார்கள் என்று.

வியாழக்கிழமையிலிருந்து அத் தொகுதிக்குத் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் பி.வேதமூர்த்தி, மனித வள அமைச்சர் எம்.குலசேகரன்,, நீர், நில, இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஆகியோர் சென்று வ்ந்துள்ளனர்.

இதற்கு முந்திய நான்கு இடைத் தேர்தல்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்குமுன் இத்தனை “பெரும் பீரங்கிகள்” களத்தில் இறக்கப்பட்டதில்லை.

வியாழக்கிழமை வான் அசிசாவும் வேதமூர்த்தியும் கேமரன் மலை குடியானவர்களுடன் பகல் விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்கள். குடியானவர்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று கோரி 12-அம்ச மகஜர் ஒன்றை வான் அசிசாவிடம் கொடுத்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட வான் அசிசா, குடியானவர்களின் நலன்காக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

மனோகரன் ஹரப்பான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள் குலசேகரன் கேமரன் மலைக்குச் சென்றார்.

கேமரன் மலை வேட்பாளர் மனோகரனும் உடன்வர, அமைச்சர் அங்கு காலை நேரச் சந்தைகளைக் கால்நடையாகவே சுற்றி வந்தார்.

வார இறுதியில் சேவியரும் அங்கு சென்றார். நீர், நில, இயற்கை வள அமைச்சு அங்கு குடியானவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்க பணிக்குழு ஒன்றை அமைத்திருப்பதாக அறிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், கேமரன் மலைக்கு அலுவல் பயணமொன்றை இன்று மேற்கொள்கிறார்.

வெள்ளிக்கிழமை, வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் சிம் ட்சே ட்சின் அவரது அமைச்சு குடியானவர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலின் வாக்களிப்பு நாள்.

ஹரப்பான் மனோகரனை அதன் வேட்பாளராக அறிவித்துள்ள வேளையில், மைபிபி தலைவர் எம். கேவியெஸ், இடைத் தேர்தலில் தானும் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்தார்.

பிஎன் அதன் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.