பெர்மாத்தாங் பாவ் எம்பி நுருல் இஸ்ஸா திடீரென்று பதவி விலகியதை அடுத்து காலியான பினாங்கு பிகேஆர் தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதன் தொடர்பில் பிகேஆர் தலைவர்கள் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
அவ்விவகாரத்தில் அவசரப்படாமல் “பொறுமையாக இருப்பீர், கட்சித் தலைவரின் அதிகாரத்தை மதிப்பீர்” என்று அறிவுறுத்திய தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனை செபராங் பிறை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் சாடினார்.
தான் ஒன்றும் அவசரப்படவில்லை என்றும் காலியாக உள்ள பதவி விரைவாக நிரப்பப்பட வேண்டும் என்று கூறியது ஒரு :நினைவூட்டல்” அவ்வளவுதான் என்றும் அபிப் கூறினார்.
“கட்சியில் உள்ளவர்கள் எதுவும் பேசக்கூடாதா? பதவியை விரைந்து நிரப்ப வேண்டும் என்று நான் கூறியது ஒரு நினைவுறுத்தல்தான். கட்சித் தலைமைத்துவத்தை ஆத்திரப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.
“மாநிலத் தலைவர் இயன்ற அளவு விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்று நான் கூறியதைச் செயலாளர் தப்பாக புரிந்து கொண்டார் போலும்”, என்று முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவர் நேற்று பினாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரான அபிப், மற்ற மாநிலங்களில் தலைவர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள். பினாங்குக்கு இன்னும் இல்லை, இதனால் “பல விவகாரங்கள் தேங்கிக் கிடக்கின்றன” என்றார்.
“மாநில அரசுத் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் மற்ற அமைப்புகளுக்கும் அரசியல் நியமனங்கள் செய்வது தாமதமடைந்துள்ளது என்று அபிப் கூறினார்.